Published : 23 May 2015 11:17 AM
Last Updated : 23 May 2015 11:17 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 32 - சபரிமலை எழுத்தாளர்

ஜெயகாந்தன் சபரிமலைக்குப் போகிறார் என்பது அந்தக் காலத் தில் சிலரால் அதிர்ச்சிகரமாக வும் சிலரால் ஆனந்தமாகவும் உணரப் பட்டது. சிலர் அவரை, ‘சபரிமலை எழுத் தாளர்’ என்று ஏளனமாகவும் எழு தினார்கள்.

அவரைச் சபரிமலைக்கு இட்டுச் சென்றதின் பாராட்டையும் அல்லது பழியையும் திருப்பத்தூர் நண்பர் களாகிய நாங்களே சுமக்கத் தகும். எங்களூரில் குப்புசாமி ஐயர் என்று ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் எழுத்தாளர் வையவனோடும் வெள்ளக்குட்டை ஆறுமுகத்தோடும் காட்பாடியில் ஆசிரி யர் பயிற்சி பெற்றவர்.

அவர் சபரிமலைக்குப் போகிறவர். அவர் மூலமாக சபரிமலை யாத்திரையின் மீது எங்களுக்கு ஒரு காதல் வந்தது. யாத்திரை மீதுதான் காதல் என்பதும், ஐயப்பனின் மீது உள்ள பக்தி அல்ல அது என்பதும் குறிப்பிடத்தக்கதுதான். யாத்திரையைப் பின்தொடர்ந்து எங் களுக்குப் பக்தி வந்தது. அது பின்னால் விவரிக்கப்படும்.

குப்புசாமி ஐயரிடம் நாங்கள் சபரி மலை யாத்திரையின் வர்ணனைகளைக் கேட்டோம். ஏற்கெனவே காடு மலை களின் மீது காதல் கொண்டிருந்த எங் களுக்கு, நாமும் சபரிமலை யாத்திரை போனால் என்ன என்ற ஆவல் பிறந்தது.

நண்பர் வையவன்தான் ஒருமுறை ஜெயகாந்தனிடம், “நாம் எல்லாம் ஒரு முறை சபரிமலை யாத்திரை போகலாமா ஜே.கே!” என்றார்.

ஜெயகாந்தன் ஒன்றும் பதில் பேச வில்லை. காதில் வாங்கி மனசுக்குள் போட்டுக் கொண்டார் போலும். அதற் கப்புறம் ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து, திடீரென்று ஜே.கே, “இந்த வருஷம் சபரிமலை யாத்திரை போகலாமா?” என்று கேட்டபோது, எங்கள் கனவு பலிக்கும் குதூகலத்தில் நாங்கள் கைதட்டி அதை வரவேற்றோம்.

ஜெயகாந்தன் தந்த தகவல்கள் பிரகாரம், நாங்கள் திருப்பத்தூரிலேயே இருமுடி கட்டிக்கொண்டு சென்னை செல்வது எனவும், ஜெயகாந்தனோடு சேர்ந்து அவர் காரில் பயணித்து சிவகாசி சென்று, அங்கே நண்பர் ராஜசபை யோடு சேர்ந்து அவர் இருமுடி கட்டிக் கொள்கிறார் என்றும் தெரியவந்தது.

திருப்பத்தூரில் நான், வையவன், வெள்ளக்குட்டை ஆறுமுகம், தண்ட பாணி, பஞ்சாட்சரம் என்கிற ஐவரும் குப்புசாமி ஐயரின் கரங்களால் மாலை அணிவிக்கப்பெற்று எங்கள் ஐயப்பன் விரதத்தை ஆரம்பித்தோம்.

விரத காலத்தில் ஒருமுறை ஜெயகாந்தன் சிங்காரப் பேட்டையில் வந்து எங்களைச் சந்தித்தார். இருவேளைக் குளியல் உட்பட எல்லா விரதங்களையும் நாங்கள் ஒழுங்காக அனு சரித்துக்கொண்டு வந்திருந் தோம். எங்கள் வாய்சொற் களில்கூட அந்த விரதத்தின் வாடை அடித்தது.

ஜெயகாந்தனோ, எப் போதும்போல் நல்ல வார்த்தைகளோடு சேர்த்து அவ்வப்பொழுது சில கெட்ட வார்த்தைகளையும் இயல்பாகப் பேசிக் கொண்டு வந்தார். நாங்கள் அவற்றை வழக்கம்போல் சிரித்து வரவேற்காமல், அவற்றைக் காதால் கேட்கவும் கூசிக் கம்மென்றிருப்பதைப் கண்டு, ‘‘என்னப்பா, விரத காலத்தில் அசிங்கமான்னு யோசிக்கிறீர்களா? பக்தி இருக்கட்டும்ப்பா… பயபக்தி எதுக்கு? பயம் உன் பக்தியை டைல்யூட் செய்து விடும். பயமில்லாமல் பக்தி செய் யுங்கள்!” என்றார்.

திருப்பத்தூரில் எங்கள் வீட்டில் தான் நாங்கள் இருமுடி கட்டிக் கொண்டோம். அந்த பூஜைக்கு எனது மாணவர்களெல்லாம் சேர்ந்து சேகரித் தனுப்பிய ஒரு கூடைத் தும்பைப் பூ இன்னும் என் மனசில் குவிந்து கிடக்கிறது.

நாங்கள் 1972-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் எங்களது முதல் சபரிமலைப் பயணத்தை மேற் கொண்டோம்.

குருஸ்வாமி குப்புசாமி ஐயரின் ஆலோசனைப்படி, நான்கு நாட்கள் நடுக்காட்டில் அடுப்பு மூட்டிச் சமைப்பதற்கான பொருள்களை எல்லாம் உள்ளடக்கி, எங்கள் இருமுடிகள் எல்லாம் மூன்று கிலோவுக்கு மேல் எடையுள்ளவை ஆகிவிட்டன.

ஆனால், நாங்கள் ஜெயகாந்தனின் ஹெரால்டு காரில் அவரையும் சேர்த்து மொத்தம் 6 பேர் சிவகாசிக் குச் சென்றபோது, யாத்திரையின் போக்கே வேறு என்பது புலப்பட்டு விட்டது.

ஜெயகாந்தனின் காரை சிவகாசியிலேயே விட்டு விட்டு, ராஜசபையும் அவரது உறவினர்களும் நண்பர் களும் நாங்களுமாகச் சேர்ந்து ஒரு பஸ்ஸில் குற்றாலம் புறப்பட்டுச் சென்றோம். நாங் கள் அங்கு போய் சேரு வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே, திறமைமிக்க ஒரு சமையற்குழு அங்கு சென்று தங் களுக்குரிய காரியங்களைச் செய்து வைத்திருந்தனர்.

புலியருவியில் ஜெயகாந்தனும் ராஜசபையும் அவரைச் சார்ந்த பலரும் அவர்களுக்குரிய இருமுடிகளைக் கட்டிக்கொண்டனர். அவர்களின் இருமுடிகள் எல்லாம் மிகவும் லகுவாக எடை குறைந்தனவாக இருந்தன.

குற்றாலத்தில் இருந்து எருமேலிக்குப் போனோம். நான் என் வாழ்வில் முதல் முறையாக மலையாள தேசத்தை நேரடியாகக் கண்ணாரப் பருகினேன், எருமேலியில் ஓர் ஆற்றில் ஒரு யானை யோடு சேர்ந்து ஆனந்தக் குளியல் போட்டோம்.

அப்புறம் கரையேறி வந்து வாவர் சந்நதியைக் கண்டோம். ஓர் இஸ் லாமியர் உட்கார்ந்து திருநீற்றுப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். ‘இன்ஷா அல்லாஹ்' சொல்லிப் பழக்கப் பட்டவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்!

பிறகு, பேட்டைத் துள்ளல். காட்டுவாசிகளின் அலங்காரத்தை எல்லாம் காதலோடு தரித்துக் கொண்டோம். பிள்ளைகளின் பலூன்கள் எல்லாம் எங்கள் தலைகளின் கிரீடங்கள் ஆயின. வர்ணங்களை வாரி முகத்திலும் உடம்பிலும் பூசிக்கொண்டோம். எங்கே உண்டு இந்த சுதந்திரம்!

பேட்டைத் துள்ளலில் நடனமாடுபவர் கள் ஒரு கையில் ஒரு தழைக் கொத் தையும் இன்னொரு கையில் ஓர் அட்டைக் கத்தியையும் வைத்திருப்பார்கள்.

அந்த நடனத்தின் தாளங்களில் ஜெயகாந்தன், “இது சண்டை… இது சமாதானம்” என்கிற ஒரு புதிய கோஷத்தைப் புகுத்தினார். “இது சண்டை… இது சமாதானம்!” என்று நாங்களும் ஆடிக் கொண்டு போனோம்.

எருமேலியில் கோயிலை நோக்கி நாங்கள் செல்லும்போது, வழியெல் லாம் கூடாரம் அமைத்துக் கடை விரித்திருந்த பாத்திரக் கடைகள் எல்லாம், காலை 11 மணி வெயிலில் தகதகவென மின்னின.

இங்கே ஒரு முக்கியமான விஷயம். நண்பர் ராஜசபை, எங்களின் முதல் சபரிமலை யாத்திரையை ஒரு வீடியோ படமாகவே எடுத்து வைத்திருந்தார். அது தெரிந்து நான் சந்தோஷப்பட்டேன். ஆனால், அந்த வீடியோவை நான் பார்த்தது இல்லை.

அதற்குப் பிறகு பலமுறை நான் ஜெயகாந்தனோடு சேர்ந்து ராஜசபையை சந்தித்தபோதும், அந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்கிற என் விருப்பத்தை வெளிப்படுத்த வில்லை. ஜெயகாந்தனே அதுபற்றிக் கேட்காமலிருக்கும்போது நான் எப்படி கேட்பது?

ராஜசபையின் குடும்பம், அந்த வீடி யோவைத் தேடி எடுத்துத் தந்தால், அது ஜெயகாந்தன் பற்றிய ஆவணங்களில் முக்கியமானதாக விளங்கும்.

- தொடர்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x