Published : 07 Dec 2016 10:03 AM
Last Updated : 07 Dec 2016 10:03 AM

ஜெ.நினைவலைகள்: பரம்பரைச் சொத்தில் அல்ல; தாயின் போராட்டத்தில் வளர்க்கப்பட்டவர்!

ஜெயலலிதாவின் தந்தை வழி பாட்டனார் நரசிம்மன் அரண்மனை வைத்தியராக பெயரும் பணமும் சம்பாதித்தார். ஆனால் ஜெயலலிதா பிறப்பதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். ஜெயராமன் இளங்கலைப் பட்டம் பெற்றவர். வேலைக்கே போகாமல், தனது தந்தையார் சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் செலவழித்துக் கரைத்துவிட்டார். தகப்பனார் ஜெயராமன் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு வயது 2. குடும்பத்தில் எஞ்சிய சொத்துகள் அனைத்தும் முதல் மனைவிக்குச் சென்றது. எனவே மைசூர் நகரைவிட்டு அக் குடும்பம் வெளியேற நேர்ந்தது.

வேதவல்லி ஜெயலலிதாவை, திருமணமாகாத தன்னுடைய தங்கை பத்மவல்லியின் பொறுப்பில் பெங்களூருவில் விட்டுவிட்டு மெட்றாஸுக்குக் குடிபெயர்ந்தார். அங்கே அவருடைய இன்னொரு சகோதரி அம்புஜவல்லி விமான பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தார். வேதவல்லி வித்யாவதி என்ற பெயரில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பிறகு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்தியா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்தார். இதற்கிடையில் பெங்களூரு பிஷப் காட்டன்ஸ் மகளிர் பள்ளியில் சேர்ந்தார் ஜெயலலிதா.

பள்ளி விடுமுறை நாள்களில் சென்னை வந்து அம்மாவைப் பார்த்துவிட்டுச் செல்வார். சந்தியா மிகப் பெரிய நடிகை அல்ல. அவருக்குச் சின்னச் சின்ன வேடங்கள்தான் கிடைத்தன. இருந்தாலும் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கும் வகையில் நடித்தார். குடும்பச் செலவுக்குப் பணம் போதாமல் சந்தியா மிகவும் சிரமப்பட்டார். இதை ஜெயலலிதா பின்னர் ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்; தான் நல்ல நிலைக்கு வந்தபோது தாயார் உடன் இல்லையே என்ற வேதனை அவருக்கு எப்போதுமே இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x