Published : 06 Oct 2016 10:03 AM
Last Updated : 06 Oct 2016 10:03 AM

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர் 10

அமெரிக்காவின் எலக்ட்ரிகல் தொழில் முன்னோடியான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர் (George Westinghouse Jr) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*நியூயார்க்கின் சென்ட்ரல் பிரிட்ஜ் என்ற இடத்தில் பிறந்தார் (1846). தந்தை இயந்திர சாதனம் விற்பனையாளர். தனது 15-வது வயதில் அமெரிக்காவில் நியூயார்க் நேஷனல் கார்ட் படையில் சேர்ந்தார். பெற்றோர் வலியுறுத்தியதால் வீடுவந்தார்.

*ஆனால், 1863-ல் பெற்றோர் அனுமதி யுடன் மீண்டும் படையில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே ராணுவத்திலிருந்து விலகி, துணைப் பொறியாளராக கப்பற் படையில் சேர்ந்தார்.

*இயந்திரங்கள், மின்சாரம் குறித்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 19-ம் வயதில் ரோட்டரி நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்து அதற்கான காப்புரிமையும் பெற்றார். 21-வது வயதில் ‘கார் ரீப்ளேசர்’ என்ற சாதனத்தைக் கண்டறிந்தார். இது தடம் மாறும் ரயில்களை மீண்டும் அவற்றின் பாதையில் செல்ல வழிகாட்டியது.

*ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் தனித்தனியான பிரேக்குகள் இருந்தன. எனவே ப்ரேக் பிடிப்பதற்காக ஒவ்வொரு பெட்டியாகச் செல்ல வேண்டியிருந்தது. 1869-ல் இதற்கு ஒரு தீர்வு கண்டார். காற்றுத் தடுப்புக் கருவியில் உள்ள ஒற்றை பைப் ரயில் முழுவதும் இணைக்கப்பட்டு அனைத்துப் பெட்டிகளின் பிரேக்குகளையும் கட்டுப்படுத்தியது. இதன்மூலம் ஒரே நேரத்தில் அத்தனை பெட்டிகளுக்கும் சேர்த்து பிரேக் போட முடிந்தது.

*ரயில்வே சிக்னல் அமைப்பிலும் பல மேம்பாடுகளைக் கொண்டுவந்தார். தனது ‘சிக்னலிங் மற்றும் ஸ்விட்சிங்’ கண்டுபிடிப்பு சாதனங்களை உற்பத்தி செய்வதற்காக 1881-ல் ‘யூனியன் ஸ்விட்ச் அன்ட் சிக்னல்’ நிறுவனத்தைத் தொடங்கினார். மின் ஆற்றல் பகிர்மானம் குறித்து பல மின் பொறியாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அமெரிக்காவின் ஆரம்பகட்ட மின்னமைப்பை வடிவமைப்பதில் தாமஸ் ஆல்வா எடிசனின் போட்டியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.

*இவரது மின் விநியோக அமைப்பு மாறுதிசை மின்னோட்ட முறையை அடிப்படையாகக் கொண்டது. இது எடிசனின் நேர்திசை மின்னோட்ட முறைக்கு மாற்றானது. 1886-ல் மின்சார நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். பல்வேறு நகரங்களில் இதன் கிளைகள் பரவின. பிரபல மின்பொறியாளர் நிக்கோலா தெஸ்ஸாவுடன் இணைந்து மாறுதிசை மின்னோட்டம் மின்மாற்றியை உருவாக்கினார்.

*இந்நிறுவனம் தொலைதூர மின் பரிமாற்றம் மற்றும் உயர் மின்ன ழுத்த மாறுதிசை மின்னோட்ட அமைப்புக்கான முன்னோடி யாகவும் விளங்கியது. இவை வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கும் மின்கடத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தன. இதனால் இந்நிறு வனம் அமெரிக்கா முழுவதும் மின்சாரத்தைக் கொண்டு சேர்த்தது.

*1893-ல் இவரும் நிக்கோலா தெஸ்ஸாவும் இணைந்து உருவாக்கிய, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பான மாறுதிசை மின் னோட்ட மின்மாற்றி, முதன்மையான மின்னோட்ட மின்மாற்றியாக உருவெடுத்தது.

*60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்கினார். இவர் மட்டுமே 631 காப்புரிமைகளைப் பெற்றார். மாறுதிசை மின்னோட்டத் துறையில் இவரது குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுக்காக எடிசன் பதக்கமும், பல்வேறு விருதுகளும் கவுரவங்களும் பெற்றார்.

*இவரது நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைபரப்பியுள்ளது. இறுதிவரை தன் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தவரும், ‘அமெரிக்கத் தொழிற்துறையின் கேப்டன்’ என்று போற்றப்பட்டவருமான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர் 1914-ம் ஆண்டு மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x