Published : 28 Jun 2016 10:48 AM
Last Updated : 28 Jun 2016 10:48 AM

எம்ஜிஆர் 100 | 95 - கருணை உள்ளம் கொண்டவர்!

M.G.R. விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தன்னுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கு அடிபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதேபோல, விலங்குகளுக்கும்கூட ஆபத்து ஏற்படக் கூடாது என்று நினைப்பார். தன் வீட்டிலேயே சில விலங்குகளை வளர்த்து வந்தார்!

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அவரது படங்களில் வரும் சண்டைக் காட்சி கள் சர்க்கரைப் பொங்கல். அவ ருடன் சண்டைக் காட்சிகளில் நடித்த நடிகர்களில் ரசிகர்களால் மறக்க முடி யாதவர் ஜஸ்டின். ‘ரகசிய போலீஸ்’, ‘அடிமைப் பெண்’, ‘இதயக்கனி’, உட்பட எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மது ரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் ஜஸ்டின் நடித்துள்ளார். அவரது ஆஜானுபாகுவான தோற்றத் தையும் சண்டைக் காட்சிகளில் திறமை யையும் பார்த்த எம்.ஜி.ஆர்., தன்னுடைய பல படங்களில் பெரும்பாலும் தனித்தே மோதும் வாய்ப்பை ஜஸ்டினுக்கு வழங்கினார். அவை படத்தின் ‘ஹைலைட்’டாக இருக்கும்.

‘இதயக்கனி’ படத்தில் பெங்களூர் அரண்மனையில் ஜஸ்டினுடன் மோதும் சண்டைக் காட்சியின் இறுதியில், எம்.ஜி.ஆர். அடித்ததும் மாடிப் படிகளில் குப்புறப்படுத்தவாறே ஒவ்வொரு படியாக தடதடவென்று ஜஸ்டின் சறுக்கி விழும் காட்சி ரசிகர்களின் கைதட்டலைப் பெறும். இதுபோன்ற காட்சிகளில் நடிப் பவர்களுக்கு அடிபடாமல் இருப்பதற் கான உத்திகளை அவர்களுக்கு எம்.ஜி.ஆரே சொல்லிக் கொடுப்பார்!

அந்த அளவுக்கு நடிகர்கள் மீது அக் கறை கொண்டவர். அந்த அக்கறையால் தான், புகழ்பெற்ற தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மற்றும் திரைத்துறை வல்லுநர்கள் சேர்ந்து 1950-ம் ஆண்டு உருவாக்கிய ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’ அமைப்பையும், பின்னர் உருவான ‘தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்’ என்ற அமைப்பையும் தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் முயற்சியால் 1952-ம் ஆண்டு ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ உருவானது. ஆரம்ப காலத்தில் அந்த சங்கம் இயங்க தன் வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்ததோடு, பின்னர், இப்போது சென்னை தியாக ராய நகரில் உள்ள இடத்தை வாங்கு வதிலும் முக்கிய பங்காற்றினார். சுமார் 22 கிரவுண்டு உள்ள அந்த இடம் அப்போது 75 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. வசூலான 35 ஆயிரம் போக மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை எம்.ஜி.ஆர். தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து உதவினார்!

ஒரு தாய், நான்கு குழந்தைகளை வைத்தபடி இருக்கும் நடிகர் சங்க இலச்சினையை உருவாக்கியதும் எம்.ஜி.ஆர்.தான்! அந்த இலச்சினை பொறித்த மோதிரத்தை நீண்ட காலம் அணிந்திருந்தார். நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து அதன் வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளார்.

‘வேட்டைக்காரன்’ படத்தின் கிளை மாக்ஸில் 20 அடி உயரமான இடத்தில் இருந்து ஸ்டன்ட் நடிகர் கே.பி.ராம கிருஷ்ணன் கீழே விழ வேண்டும். அவர் விழும் இடத்தில் பாம்புகள் இருக்கும். ராமகிருஷ்ணனைப் பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘கீழே மெத்தை போடச் சொல்லட்டுமா?’’ என்றார். ‘‘இல்லண்ணே, நான் பார்த்து குதிச்சுடறேன்’’ என்றார் ராமகிருஷ்ணன்.

பின்னர், எம்.ஜி.ஆர். கூறிய வார்த்தை கள், வாயில்லா ஜீவன்களையும் அவர் எப்படி நேசித்தார் என்பதைக் காட்டும். ராம கிருஷ்ணனிடம், ‘‘பாம்புகள் மேலே படாமல் பார்த்து குதிக்கணும். பாம்புகள் மேலே விழுந்தால் அவை செத்துடும், பாவம்’’ என்று கூறினார்.

‘நல்ல நேரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். நான்கு யானைகளை வளர்ப்பார். தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது யானைகளுக்காக நிறைய உருண்டை வெல்லம், கரும்பு, வாழைத் தார்கள் வாங்கி வந்து யானைகளுக்குக் கொடுப்பார். அவைகள் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்து மகிழ்வார்!

தனது வீட்டில் கரடிக் குட்டியையும் நாய்களையும் எம்.ஜி.ஆர். வளர்த்து வந்தார். கரடிக் குட்டி தினமும் காலையில் அவர் கையால்தான் ஃபீடரில் பால் குடிக் கும். தன் வீட்டில் வளரும் மிருகங்களை கவனிக்க தனியே ஒரு மருத்துவரையும் நியமித்திருந்தார். கரடிக்கு மூக்கில் சங்கிலி இணைக்க வசதியாக மருத்துவரின் உதவியுடன் துளையிட முயன்றபோது அது இறந்துவிட்டது. எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப்பட்டார்.

வீட்டில் இரண்டு சிங்கங்களையே எம்.ஜி.ஆர். வளர்த்தார். ஒன்றின் பெயர் ராஜா. பெண் சிங்கத்தின் பெயர் ராணி. இதில் ராஜா என்ற சிங்கத்துடன்தான் ‘அடிமைப் பெண்’ படத்தில் கிளைமாக் ஸில் எம்.ஜி.ஆர். மோதுவார். அந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கினார். அது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. ‘‘சிங்கத்தின் வாயை தைத்து விடலாம்’’ என்று சிலர் யோசனை கூறிய போது எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். ராணி சிங்கம் ‘அடிமைப் பெண்’ படம் எடுக்கும் முன்பே இறந்துவிட்டது.

பின்னர், ராஜா சிங்கத்தை மிருகக் காட்சி சாலைக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து விட்டார். அங்கு சில ஆண்டுகளுக்குப் பின் முதுமையால் அது இறந்துவிட்டது. அந்த சிங்கத்தின் மேல் வைத்திருந்த பிரியத்தால் அதன் உடலை வாங்கி பாடம் செய்து வைத்திருந்தார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்குச் சான்றாய், அவரது நினைவு இல்லத்தில் கண்ணாடிப் பேழைக்குள் இன்றும் கம்பீரமாக நிற்கிறான் ‘ராஜா’!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்



தமிழ்ப் படத்தில் முதன்முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்த ஹீரோ எம்.ஜி.ஆர்.தான்! ‘நாளை நமதே’ படத்தில் சங்கர் என்ற பாத்திரத்தில் வரும் எம்.ஜி.ஆர். கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்திருப்பார்! ‘படகோட்டி’ படத்தில் படம் முழுவதும் செருப்பு அணியாமல் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்!

முந்தைய தொடர்களை வாசிக்க: > எம்ஜிஆர் 100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x