Last Updated : 18 Jan, 2017 09:22 AM

 

Published : 18 Jan 2017 09:22 AM
Last Updated : 18 Jan 2017 09:22 AM

என்னருமை தோழி..!-14: அண்ணாவிடம் ஆசி!

ரோஜா தேவியின் தாய் அப்படி என்ன குண்டைத் தூக்கிப் போட்டார் என்று புரியாமல் நீங்களும் உங்கள் தாயும் நிற்க... ‘அரச கட்டளை’ படத்தின் சில காட்சிகளை எம்.ஜி.ஆர். சுடப்படுவதற்கு முன்பே எடுத்திருந்தார்கள். அதில் ஒரு கதாநாயகியாக சரோஜா தேவியும் நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆரின் உடல்நலம் விசாரிக்க வந்திருந்த சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மா, தன் மகளுக்குத் திருமணம் பேசி முடித்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் சொல்லி இருக்கிறார்! இனி அவர் ‘அரச கட்டளை’யில் நடிப்பது கஷ்டம் என்பதாகவும் கூறி இருக்கிறார்.

‘‘அம்மு, நான் தொடர்ந்து நடிக்கணும்னு முடிவு எடுத்திருக்கும் நிலையில், ருத்ரம்மா இப்படி சொல்லிட்டு போய்ட்டாங்க. என்ன ஆனாலும் சரி. நம்ம ஒப்பந்தப்படி ‘அரச கட்டளை’, ‘காவல்காரன்’ படங்களை எடுத்து முடிச்சுடணும்...’’ என்று தீவிர உறுதியுடன் எம்.ஜி.ஆர். சொல்ல, சிவாஜி கணேசனுடன் நடிக்கும் எண்ணத்தை நீங்கள் கைவிட்டீர்கள்!

எம்.ஜி.ஆர். நன்கு குணமானாலும் அவரால் உடனடியாக இயல்பாகப் பேச முடியவில்லை. அதனால், மீண்டும் நடிக்க வந்த அவருக்கு ‘அரச கட்டளை’ படப்பிடிப்பில் வசனம் தரப்படாமல் ஒரு கத்திச்சண்டை காட்சியும், அவர் மகுடம் சூட்டிக் கொள்வது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த பொதுத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்து அண்ணா முதல்வராகியிருந்தார். உடல் நிலை குணமாகி மீண்டும் நடிக்கத் துவங்கிய நாளில், உங்களையும் அழைத்துக்கொண்டு அண்ணா விடம் சென்று ஆசி பெற்றார் எம்.ஜி.ஆர்.!

ந்நிலையில், சரோஜா தேவி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருப்பதால், இனி அவருடன் நடிப்பதாக இல்லை என்றும் இதர நடிகர்களுடன் நடிக்க போவதாகவும் கூறியிருந்தார். திருமணம் செய்து கொண்டு நடிப்புத் துறைக்கு முழுக்கு போடப்போவதாக அவரது தாய் சொல்லி இருக்க... இந்தப் பேட்டியைப் பார்த்து படத்தின் இயக்குநரும், எம்.ஜி.ஆரின் அண்ணனுமான எம்.ஜி.சக்ரபாணி வருத்தமுற்றார்.

‘‘சரோஜா தேவி கதாபாத்திரத்தை ‘அரச கட்டளை’ படத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லையே’’ என்று குழப்பத் துடன் அவர் சொல்ல, எம்.ஜி.ஆர். ஆலோசித்தார். 9 ஆண்டுகளுக்கு முன் ‘நாடோடி மன்னன்’ படத்தின்போது நடந்த சம்பவங்கள் அவர் நினைவில் நிழலாடின. தானே தயாரித்து, இயக்கி, நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் தன் விருப்பத்துக்கேற்ப சில காட்சிகளை எம்.ஜி.ஆர். மீண்டும் மீண்டும் மாற்றி எடுத்தார். அது கதாநாயகியாக நடித்த பானுமதிக்குப் பிடிக்கவில்லை.

இதனால், இருவருக்கும் இடையே சில பிரச்சினைகள் எழுந்தன. இனியும் பானுமதியுடன் நடிக்க முடியாது என்ற முடிவுக்கு எம்.ஜி.ஆர். வந்தார். பானுமதியும் படத்திலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்தார். பின்னர், படத்தில் வில்லன் நம்பியாரால் கத்தியால் குத்தப்பட்டு பானுமதி இறந்து விடுவது போல கதையின் காட்சிகளை மாற்றி... சரோஜா தேவியை முக்கிய கதாநாயகியாக ஆக்கிவிட்டார் எம்.ஜி.ஆர்.!

பானுமதி வரும் காட்சிகள் வரை ‘நாடோடி மன்னன்’ படம் கறுப்பு வெள்ளையில் இருக்கும். கதையின்படி, கன்னித் தீவு என்ற இடத்தில் இளவரசி ரத்னாவாக வரும் சரோஜா தேவி இருப்பார். அவரைத் தேடி கன்னித் தீவுக்கு எம்.ஜி.ஆர். வரும் காட்சியில் இருந்து படம் வண்ணத்தில் இருக்கும்.

‘அரச கட்டளை’ படத்தில் மேற்கொண்டு நடிக்க சரோஜா தேவிக்கோ விருப்பம் இல்லை. பார்த்தார் எம்.ஜி.ஆர்.! ‘நாடோடி மன்னன்’ படத்தில் செய்தது போல, ‘அரச கட்டளை’யில் இளவரசி அமுதாவாக வரும் சரோஜா தேவி பாத்திரம் கொல்லப்படுவது போல கதையை மாற்றிவிட்டார். மோஹனா என்கிற கதாபாத்திரமாக வரும் அம்முவை முக்கிய கதாநாயகியாக மாற்றி பிரச்சினைக்கு எம்.ஜி.ஆர். தீர்வு கண்டார்!

ன்னருமை தோழி...!

அதைத் தொடர்ந்துதான், சரோஜா தேவி ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகி இருந்த இரு படங்களில் (ரகசிய போலீஸ் 115, அடிமைப் பெண்) இருந்தும் அவர் வேறு வழியில்லாமல் நீக்கப்பட்டார். ‘அரச கட்டளை’ திரைப்படம் 1967-ல்

மே மாதம் 19-ம் தேதி அன்று ரிலீஸ் ஆனது. ஆட்சிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட அந்தப் படம், காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக ஆட்சி அமைந்துவிட்ட நிலையில், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் ‘கலைச்செல்வி’ என்கிற பட்டத்துடன் தமிழ் திரையுலகின் முடிசூடா அரசியாக அடுத்தடுத்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினீர்கள்.

‘காவல்காரன்’ படப்பிடிப்பு துவங்கியபோது, தயாரிப்பாளர் சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் இயக்குனர் ப.நீலகண்டன் இருவரும் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்தார்கள். ஷூட்டிங் நடைபெற்ற சத்யா ஸ்டூடியோ அரங்கில் எம்.ஜி.ஆர். நுழைந்ததும் கவிஞர் வாலி இயற்றி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த ‘‘நினைத்தேன் வந்தாய்..நூறு வயது...’’என்ற இன்ப மயக்கம் தரும் இனிமையான பாடல் சூழலுக்கேற்ப பொருத்தமாக ஒலித்தது. எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு குணமாகி மீண்டும் நடிக்க வந்த எம்.ஜி.ஆருக்கு இந்த உணர்ச்சிமயமான வரவேற்பு!

படத்திற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் ‘மனைவி’. ஆனால், எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டி ‘காவல்காரன்’ என்று மாற்றப்பட்டது. படம் ‘சூப்பர் ஹிட்’ ஆனது. இலங்கையில் வெள்ளி விழா கொண்டாடியது, ‘காவல்காரன்’ உங்களுக்கும் மிகவும் பிடித்த படம்.

படப்பிடிப்பின்போது, உங்கள் கதாபாத்திரத்தின் பெயரான, ‘சுசீலா’ என்பதை எம்.ஜி.ஆர். சரியாக உச்சரிக்க முடியாமல் துன்பப்பட்டதை, கண்கூடாக பார்த்து நீங்கள் வேதனைப்பட்டீர்கள். திரையரங்குகளில் அவர் உச்சரிப்பைக் கேட்டு ரசிகர்களோ கண்ணீர் விட்டனர்.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில் முதல்வராக இருந்த அண்ணா கலந்து கொண்டார். ‘காவல்காரன்’ படத்தின் நாயகியான நீங்கள் அண்ணாவின் கரங்களால் விருது பெற்றீர்கள்!

டுத்த படம், தங்களுக்கு இன்னும் பெரிய பெயரை பெற்றுக் கொடுத்த, ‘ரகசிய போலீஸ் 115’. சரோஜா தேவியை வைத்து எடுத்திருந்த பகுதிகள் நீக்கப்பட்டு, உங்களை வைத்து புதிதாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பி.ஆர்.பந்துலு தயாரித்து, இயக்கி வண்ணத்தில் வெளியான ‘ரகசிய போலீஸ் 115’ படமும் பெரும் வெற்றி பெற்றது.

அந்தப் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வந்தார் ஒரு நடிகை. அந்த நடிகையைப் பார்த்ததும் சற்றே வியப்படைந்தீ்ர்கள். தமிழ்த் திரையில் உங்களுடன் அறிமுகமானவர் அவர். திரையுலகில் உங்களுக்கு போட்டியாக இல்லாவிட்டாலும், பின்னாளில் உங்களை எதிர்த்து தேர்தல் களத்தில் போட்டியிட்டவர் அந்த நடிகை...!

- தொடர்வேன்
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x