Published : 16 May 2016 11:57 AM
Last Updated : 16 May 2016 11:57 AM

ஈலியா மெக்னிகாவ் 10

நோபல் பெற்ற ரஷ்ய விலங்கியலாளர்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரஷ்ய விலங்கியலாளர் ஈலியா மெக்னிகாவ் (Ilya Mechnikov) பிறந்த தினம் இன்று (மே 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அன்றைய ரஷ்யப் பேரரசின் கீழ் இருந்த உக்ரைனில் இவனோவ்கா என்ற கிராமத்தில் (1845) பிறந்தார். தந்தை பாதுகாப்புப் படை அதிகாரி. தாய்தான் இயற்கை அறிவியல் குறித்த ஆர்வத்தை தன் மகனுக்குள் கிளை விரிக்கவைத்தார்.

# அதே ஊரில் பள்ளிப் படிப்பை முடித் தார். தாவரவியல், நிலவியலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். 17 வய தில் கார்கோஃப் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியலில் சேர்ந்தார். 4 ஆண்டு படிப்பை இரண்டே ஆண்டுகளில் முடித்தார். முதல் ஆண்டிலேயே ஒருசெல் உயிரினங்கள் குறித்த தனது முதல் அறிவியல் கட்டுரையை வெளியிட்டார்.

# பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காட்டிங்கன், கீஸன் பல்கலைக்கழகங்கள், மூனிச் அகாடமி ஆய்வுக்கூடங்களில் பணிபுரிந்தார். நூற்புழுக்கள் குறித்தும், தட்டைப் புழுக்களின் செல்லக செரிமானம் குறித்தும் ஆராய்ந்தார். இத்தாலியின் நேபிள்ஸ் நகருக்கு சென்று, விலங்கினங்களின் கருவளர்ச்சி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்லைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

# ரஷ்யா திரும்பியவர், ஒடெஸா என்ற இடத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 22. சில மாணவர்களைவிடவும் இவர் வயதில் சிறியவராக இருந்தார்.

# விலங்கியல், ஒப்பீட்டு உடற்கூறியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர் இத்தாலியின் மெஸினா நகருக்கு சென்று, தனிப்பட்ட முறையில் ஆய்வுக்கூடம் அமைத்து ஒப்பீட்டு கருவியல் குறித்து ஆராய்ந்தார். 1888-ல் பாரீஸ் சென்றார். அங்கு உயிரியல், நுண்ணுயிரிகள், நோய்கள், தடுப்பூசிகள் குறித்த ஆய்வுக்காகவே தொடங்கப்பட்ட பாஸ்டர் நிறுவனத்தில் சேர்ந்து, இறுதிவரை பணியாற்றினார்.

# நுண்ணுயிரிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டார். நட்சத்திர மீனின் லார்வா குறித்து ஆராய்ந்தார். உயிரினங்களின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பதைக் கண்டறிந்தார்.

# இதுகுறித்து பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். இதற்காக இவருக்கு 1908-ல் பால் எர்லிச் என்பவருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

# தனது ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். ஒப்பீட்டு நோயியல், பரிணாம கருவியல், நுண்ணுயிரியல் துறைகளுக்கும் மகத்தான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பேராசிரியராக இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது.

# முதுமையை தடுப்பது, வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். நோபல் பரிசு தவிர, பல்வேறு பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல கவுரவப் பட்டங்களைப் பெற்றார். பல்வேறு அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மூப்பியல் (ஜெரன்டாலஜி) என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார்.

# தனிப்பட்ட முறையிலும் பிற விஞ்ஞானிகளுடன் இணைந்தும் மனித குடல் சுரப்பிகள், முதுமை விளைவிக்கும் பாக்டீரியா குறித்த பல ஆய்வுகளையும் மேற்கொண்டார். ‘நோய் எதிர்ப்பு சக்தி துறையின் தந்தை’ என்று போற்றப்படும் ஈலியா மெக்னிகாவ் 71-வது வயதில் (1916) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x