Published : 22 Mar 2017 08:24 AM
Last Updated : 22 Mar 2017 08:24 AM

இளையராஜா எழுப்பும் உரிமை கீதம்

இந்தியப் பொருளாதாரம் சிறப்பான முன்னேற்றத் தைக் கண்டு கொண்டிருக்கிறது.

அரசின் புள்ளி விவரக் கணக்குப்படி, நாம் விரைவில் உலகின் சூப்பர் பொருளாதாரமாக உருவாக இருக்கிறோம். மிக நல்லது. ஆனாலும், வணிக ரீதியாக சிந்திப்பதில், செயல்படுவதில் நாம் இன்னமும் கட்டுப்பெட்டியாகவே இருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கான ‘கிளாசிக்’ உதாரணம் - எஸ்.பி.பி. - இளையராஜா இடையிலான ‘காபிரைட்’ விவகாரம்.

இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் இருந்து ஒரு இசை அமைப்பாளர், தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்கிறார் என்பது உண்மையில் மிகப் பெரிய நற்செய்தி. இப்படி உரிமை கோராமல் விட்டதால், பல துறைகளில் தமிழ் மொழி இழந்தது ஏராளம். ஆவணப்படுத்துதல், உரிமை கோருதல், ‘முதன்மை’யை நிலை நிறுத்திக் கொள்ளுதல், ஆளுமையை விட்டுக் கொடுக்காது இருத்தல், தனித் தன்மையைப் பாதுகாத்தல்... இவை எல்லாம் செய்யாததால்தான், “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிக் கொண்டு” இருக்கிறோம். காலம் காலமாக எதையும் விலை வைத்துப் பேசிப் பழக்கப்படாத இனமாக இருப்பதால்தான், மஞ்சள் தொடங்கி வேப்பிலை வரைக்கும் அனைத்திலும் ‘உரிமை’ இழந்து நிற்கிறோம் நாம்.

இளையராஜா பாடல் சச்சரவுக்கு வருவோம். பாடகர், பாடல் ஆசிரியர், வாத்தியக்காரர்கள் என்று பலரும் இணைந்துதான் ஒரு பாடலை உருவாக்குகிறார்கள். ஆனாலும், இசை அமைப்பாளர்தான் ஒரு பாடலின் ‘எசமான்’. தன் பாடலின் மீது அவருக்கே மிக அதிக உரிமை.

ஆங்கிலத்தில் ‘ஒரிஜினாலிட்டி’ என்று ஒரு சொல் உண்டு. எந்த ஒரு படைப்புக்கும் இதுதான் உயிர் நாடி. இந்த ‘ஒரிஜினாலிட்டி’யின் வேர்ச் சொல் - ‘ஆரிஜின்’. அதாவது - மூலம். முதன் முதலாக ஆதியில் எங்கு எவரிடம் உதிக்கிறதோ அந்த இடம், அந்த நபர்தான் - ‘ஆரிஜின்’. இசையமைப்பாளரின் சிந்தனையில் ஜனிக்கிறது பாடல். இசையமைப்பாளர்தான், ஒரு பாடலுக்கு உயிர் தருகிறார்; வடிவம் தருகிறார். அவர் எதிர்பார்க்கிறபடி, இசையின் வடிவத்துக்கு ஒப்ப, ஒரு பாடகர் தனது குரலை வழங்குகிறார். அதனால்தான், ஒரு மேடையில் ஒரு பாடலை இசைக்க, அதன் ‘உண்மையான’ பாடகர் தேவைப்படுவதில்லை. ஆனால், அப்பாடலின் உண்மையான இசை வடிவம் மிக நிச்சயம் தேவை.

இதேபோன்றே, ஒரு பாடலின் செய்தி அல்லது சூழலுக்கு ஏற்ப பாடல் வரிகள் தரப்படுகின்றன. அவ்வளவுதான். பாடல் வரிகள் இன்றி, முழுவதும் கருவிகளிலேயே ஒரு பாடலை அதே ஜீவனுடன் வழங்க முடியும். ஆக, ஒரு பாடலின் ஆத்மா, இசையன்றி வேறில்லை. அதனால்தான் இசையமைப்பாளருக்கு அவரது பாடலின் மீது சிறப்பு உரிமை வந்து விடுகிறது.

அப்படியிருக்க, வணிக ரீதியாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறபோது, தன்னுடைய பாடல்களுக்கு இசை அமைப்பாளர் ‘ராயல்டி’ அல்லது ‘காப்பிரைட்’ கேட்பதில் என்ன தவறு..? இது, எல்லாத் துறையினருக்கும் பொதுவான சட்ட நடைமுறை. திரை இசைக்கு மட்டும் எப்படி இல்லாமல் போகும்..?

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நாம் இன்னமும் நம்முடைய பொருட்களை, திறமைகளை, பங்களிப்பை வணிக ரீதியாக வழங்குவதில் பின்தங்கியே உள்ளோம். எதையும் ‘விற்பது’, மோசம், அநியாயம், ஒழுக்கக் கேடு என்று முற்றிலும் தவறான புரிதலில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இது மாதிரியான பழமைவாத பிற்போக்குத் தனமான அணுகுமுறையில் இருந்து நாம் வெளியில் வந்தாக வேண்டும். நம்முடைய பங்களிப்புக்கு நாம் ‘மதிப்பு’ தந்தால்தானே சர்வதேச அரங்கில் அதற்கு மதிப்பை உண்டாக்க முடியும்..? இலவச மாகத் தருகிற எதையும் இவ்வுலகம் மரியாதையுடன் பார்ப்பது இல்லை.

‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேசி நியாயமான காப்புரிமையை பெற்றுத்தர முயற்சிக்கிறேன்’ என்று எஸ்.பி.பி. சொல்லியிருந்தால், மிகச் சிறந்த முன்னுதாரணத்தைப் படைத் திருப்பார். இப்போதும் காலம் தாழ்ந்து விடவில்லை. இனியும் இது நடக்கலாம். ரசிகர்கள் அறிந்தவரை யில், எஸ்.பி.பி. அகன்ற இதயமும் நாசூக்கான அணுகுமுறையும் கொண்டவர். ஆகவே இசை ரசிகர்களின் வருத்தம் நீங்கும் விதத்தில் சுமுகத் தீர்வு காண்பார் என்று நம்பலாம்.

வெவ்வேறு வணிகங்களில் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்களை, வெவ்வேறு தராசுகளை வைத்துக்கொண்டு இருக்கிறோம். திருட்டு விசிடிக்கு எதிராக பொதுவெளியில் கடுமையாகப் பேசுகிறோம். அதேசமயம், ஒரு புத்தகத்தை நகல் எடுக்கலாம்; சுற்றுக்கு விடலாம்; யாரும் எப்படியும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை. இது குறித்து, புத்தகப் பதிப்பாளர்களின், எழுத்தாளர்களின் உரிமை பற்றி யாரும் கவலைப் படத் தயாராக இல்லை.

“ஏற்கெனவே உள்ள பணமும் புகழும் போதாதா..?’ என்கிற கேள்வி இங்கே அர்த்தமற்றது. யாரோ ஒரு தனி நபரின் ‘வசதி’ தொடர்பான சங்கதி அல்ல இது. ‘வணிக நிகழ்ச்சி’ என்று வரும்போது ‘வணிக அணுகு முறை’ இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருக்கு மான நியதி. இப்படி ஒரு உரிமைக்குரல் தமிழ் இனம் எப்போதோ எழுப்பி இருக்க வேண்டிய ஒன்று. இப்போது தான் இளையராஜா தொடங்கி வைத்திருக்கிறார்.

இன்னமும் நீ.....ண்ட தூரம் போக வேண்டியதிருக் கிறது.

நம் மொழிக்கு, நம் இசைக்கு, நம் பங்களிப்புக்கு நாம் வைக்கும் காப்புரிமை என்னும் விலைதான் உலக அரங்கில் நம் மதிப்பை மேலும் உயர்த்தும். இது எல்லாத் துறைகளுக்கும், எல்லாத் தமிழர்களுக்கும் பொருந்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x