Published : 02 Sep 2018 03:54 PM
Last Updated : 02 Sep 2018 03:54 PM

காதலரைக் கரம் பிடித்தார் சுப்ரமணியபுரம் சுவாதி

தன்னுடைய காதலரான பைலட் விகாஸைத் திருமணம் செய்துகொண்டார்‘சுப்ரமணியபுரம்’ சுவாதி. ஹைதராபாத் நகரில் கடந்த மாதம் 30-ம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இன்று கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சுவாதி ரெட்டி, முதலில் மா டிவியில் கலர்ஸ் என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கலர்ஸ் சுவாதி என்றே ஆந்திரம் முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து 'டேஞ்சர்' என்கிற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார்.

பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 'ஆடவாரி மாடலக்கு அர்த்தாலே வேறுலே' (தமிழில் யாரடி நீ மோகனி) படத்தில் நாயகியின் தங்கை கதாபாத்திரத்தில் அவர் நடித்தது விமர்சகர்களிடம் நற்பெயரைப் பெற்றுத் தந்தது.

தமிழில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அடுத்தடுத்து தெலுங்கில் மட்டுமே நடித்து வந்தாலும், தமிழில் அவ்வபோது, 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ’வடகறி', 'யட்சன்', 'யாக்கை' என சில படங்களில் நடித்தார். நடுவில் மலையாளத்தில் இவர் அறிமுகமான 'ஆமென்' படமும் சூப்பர் ஹிட்டானது.

தற்போது தனது காதலர் விகாஸை சுவாதி திருமணம் செய்துகொண்டார். விகாஸ் மலேசியன் ஏர்லைன்ஸில் பைலட்டாகப் பணிபுரிகிறார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஹைதராபாத் நகரில் கடந்த மாதம் 30-ம் தேதி அன்று இவர்கள் திருமணம் நடைபெற்றது. இன்று கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x