Published : 24 Aug 2018 04:37 PM
Last Updated : 24 Aug 2018 04:37 PM

திருமண மண்டபமாக மாறிய நிவாரண முகாம்: கேரள வெள்ளத்தில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் கேரளாவில் யாரும் எதிர்பாராதவகையில் வெள்ள நிவாரண முகாமில் நடந்த திருமணம் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரளாவில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். வீடு, உடமைகள், சொந்தங்களை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு இடையே அடுத்த வேளை உணவுக்கே உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் உள்ளனர்.

இந்தநிலையில், எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூர் அருகே கடும் வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்குள்ள நிவாரண முகாம்களி் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுபேஷ் மற்றும் சிபினா குடும்பத்தினரும் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு திருமணம் நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் இவர்களின் வாழ்க்கையே மாறிப் போனது. மஸ்கட்டில் பணியாற்றும் சுபேஷ் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது வாழ்க்கையை புரட்டிப்போட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.

ஊர் முழுவதும் வெள்ளத்தில் சிக்கி, தண்ணீர் சூழல முகாமில் தங்கிய நிலையில் எப்படி திருமணம் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. திருமணத்தை ஒத்தி வைக்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் முகாமில் உடன் தங்கியிருந்தவர்களும், அவர்களது நண்பர்களும், திட்டமிட்டபடி திருமணத்தை, அதுவும் வெள்ள நிவாரண முகாமில் நடத்தலாம் என கூறினர்.

அதன்படி நிவாரண முகாமில் நேற்று அவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த விவரத்தை முகாம் அதிகாரிகளிடம் சொல்ல, அவர்களும் உற்சாகமாகினர். திருமணத்துக்கு தேவையான மாலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வந்தனர். நிவாரண முகாம்களில் அகதிகளாக தங்கி இருந்த மக்களும் தங்கள் கவலையை மறந்து மண மக்களை வாழ்த்த அவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்த விருந்தாக நிவாரண முகாமில் பறிமாறப்படும் உணவு அமைந்தது. சொந்தம், நட்பு, தாங்கள் விரும்பியவர்கள் என யாரும் இல்லாதபோதும், திடீர் உறவுகளாக அமைந்த சக முகாம்வாசிகளின் வாழ்த்துக்கள் அந்த மண மக்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ‘‘சாதகமான சூழலில் தான் புதிய வாழ்க்கை தொடங்க வேண்டும் என மணமக்கள் விரும்புவார்கள். ஆனால் நூற்றாண்டில் இல்லாத பேரிடரில் எங்கள் வாழ்க்கையை தொடங்கியுள்ளோம். நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள இந்த சூழல் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x