Last Updated : 12 Jul, 2019 10:36 AM

 

Published : 12 Jul 2019 10:36 AM
Last Updated : 12 Jul 2019 10:36 AM

மக்களவையில் நள்ளிரவு 11.58 மணி வரை நீடித்த ரயில்வே மானியக் கோரிக்கை விவாதம்: புதிய சாதனை

மக்களவையில் ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நள்ளிரவு 11.58 மணி வரை நீடித்தது.

கடந்த 18 ஆண்டுகளில் மக்களவையில் நீண்ட விவாதம் நடந்தது இதுதான் முதல் முறை. இது புதிய சாதனை என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மக்களவையில் ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நண்பகல் தொடங்கியது. இந்த விவாதத்தின் மீது திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல்வேறு எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினார்கள். ஏறக்குறைய இரவு 11.58 மணிவரை நடந்த விவாதத்தில் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.

இந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகள் சார்பில் பேசிய எம்.பி.க்கள், பிரதமர் மோடி அரசு மீது குற்றம் சாட்டினார்கள். ரயில்வே துறையின் சேவைகளின் மேம்படுத்துவதற்குப் பதிலாக சொத்துகளை விற்பதற்கு மோடி அரசு முயல்கிறது என்று குற்றம் சாட்டினர். அதற்கு பாஜக சார்பில், ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்தி, ஒவ்வொரு நாளும், கட்டமைப்பையும், பாதுகாப்பையும் வலுப்படுத்தி வருகிறோம் என பதில் அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் , திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், மோடி அரசை கடுமையாக விமர்சித்தனர். ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முயல்கிறது, மக்களிடம் கனவுகளை விற்பனை செய்வது போல், புல்லட் ரயில் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என விமர்சித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த பாஜக எம்.பி. சுனில் குமார், ''காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ரயில்வே துறையின் செயல்பாட்டைக் காட்டிலும் இப்போது இருக்கும் ரயில்வே துறை சிறப்பாகச் செயல்படுகிறது. ஏராளமான புதிய மைல்கற்களை அடைந்துள்ளது. ரயில்வே விபத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 73 சதவீதம் குறைந்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

ரயில்வே துறை இணையமைச்சர் எஸ். அங்காடி கூறுகையில், "ரயில்வே குடும்பம் போன்றது. ஒவ்வொருவரையும் மனநிறைவு செய்து, ஒற்றுமையாக இருக்க வைக்கும். அனைத்து உறுப்பினர்களும் நல்லவிதமான ஆலோசனைகள் அளித்தார்கள். வாஜ்பாய் அமைத்துக் கொடுத்த பாதையில், மோடி பிரதமராக வந்தபின் ஏராளமான நல்ல மாற்றங்களை ரயில்வே கண்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இவ்வாறு ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதம் நள்ளிரவு 11.58 மணி வரை நீடித்தது. இந்த விவாதம் குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், "கடந்த 18 ஆண்டுகளில் மக்களவையில் ஒரு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நள்ளிரவு வரை நடந்தது இதுதான் முதல் முறை. இது மிகப்பெரிய சாதனை. மக்களவையில் எம்.பி.க்களும் நள்ளிரவு வரை அமர்ந்திருந்ததும் சிறப்பு" எனத் தெரிவித்தார்.

ரயில்வே மானியக் கோரிக்கைக்கு இன்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x