Published : 11 Jul 2019 03:08 PM
Last Updated : 11 Jul 2019 03:08 PM

கர்நாடக விவகாரம்: சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் மனு; நாளை விசாரணைக்கு வருகிறது

கர்நாடக அதிருப்தி காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேபோல இன்று எம்எல்ஏக்கள் அளிக்கும் ராஜினாமா கடிதத்தின் மீது முடிவு எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி  ராஜினாமா திடீரென ராஜினாமா செய்தனர்.

அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேரையும் பாஜக நிர்வாகிகள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்னர். 

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் , 8 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் விதிமுறைக்கு மாறாக இருக்கிறது எனவும், அதை ஏற்க முடியாது எனவும் கூறி நிராகரித்து விட்டார்.

5 எம்எல்ஏக்களும் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்பட்ட 8 எம்எல்ஏக்களும் சபாநாயகரை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கடிதம் அளித்தால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இந்த சூழலில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆகியோர் இணைந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரபபு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மும்பையில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா குறித்து முறைப்படி தெரிவிக்க வேண்டும். எம்எல்ஏக்கள் ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகரும் இன்றுக்குள் முடிவு எடுத்து அதை நீதிமன்றத்துக்கு  தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் இன்றுக்குள் தெரிவித்தபின் இந்த விவகாரம் நாளை மீண்டும் விசாரிக்கப்படும்

10 எம்எல்ஏக்களும் சபாநாயகரைச் சந்திக்கச் செல்லும்போது, அவர்களுக்கு விமானநிலையத்தில் இருந்து சபாநாயகர் அறை வரை போதுமான போலீஸ் பாதுகாப்பை அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கர்நாடக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் தேவை எனக் கூறி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் சபாநாயகர் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். சபாநாயகர் முதலில் முடிவை அறிவிக்க வேண்டும், அதன் பிறகு நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x