Last Updated : 11 Jul, 2019 11:58 AM

 

Published : 11 Jul 2019 11:58 AM
Last Updated : 11 Jul 2019 11:58 AM

கர்நாடக சட்டப்பேரவையைச் சுற்றி 144 தடை உத்தரவு: ஆளுநர் மீது பாஜகவினர் நம்பிக்கை

கர்நாடக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், சட்டப்பேரவை பகுதியில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாத வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையைச் சுற்றி 2 கிலோமீட்டர் சுற்றளவில் 5 நபர்களுக்கு மேல் நிற்கக்கூடாது என்று  பெங்களூரு போலீஸ் ஆணையர் அலோக் குமார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் பாஜகவினர் போராட்டம் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை தகவல் அளித்ததைத் தொடர்நது நேற்று நள்ளிரவு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் உள்ளிட்ட 16 பேர் ராஜினாமா செய்தனர். .

 ஆனால், இந்த ராஜினாமா கடித்ததை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. 8 எம்எல்ஏக்கள் கடிதம் முறையின்றி இருப்பதால் தன்னால் கடிதத்தை ஏற்க முடியாது, 5 எம்எல்ஏக்கள் தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சமாதானப் பேச்சு நடத்தும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக அமைச்சருமான டி.கே. சிவக்குமார் நேற்று மும்பை சென்றார். மும்பையில் தனியார் ஒட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க சிவக்குமார் முயன்றபோது அவர்களை போலீஸார் ஓட்டலுக்குள் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனால் தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் சிவக்குமாரை கைது செய்த மும்பை போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பல காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் முதல்வர் குமாரசாமி அமைச்சரவையைக் கூட்டி அரசியல் நிலவரம் குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த அமைச்சரவைக் கூட்டம் நடக்காத வகையில் போராட்டம் நடத்தப்படலாம் என்று ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, இந்த தடை உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே ஆளுநர் வாஜுபாய் வாலைச் சந்தித்து நேற்று எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் மனு அளித்தனர். அப்போது, வெள்ளிக்கிழமை(நாளை) நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் உத்தரவிடக்கோரி பாஜகவினர் கேட்டுக்கொண்டார்கள்.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் மதுசூதனன் கூறுகையில், "பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் உத்தரவிடுவார் என்று நம்புகிறோம். ஏனென்றால் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசில் இருந்து 16எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். பெரும்பான்மையை குமாரசாமி அரசு இழந்துவி்ட்டது " எனத் தெரிவித்தார்.

பாஜகவினர் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கோருவார்களா என்று கேட்டதற்கு, மதுசூதனன் கூறுகையில், " எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் இன்னும் ஏற்காத நிலையில் முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x