Published : 11 Jul 2019 08:20 AM
Last Updated : 11 Jul 2019 08:20 AM

நாடாளுமன்ற துளிகள்: ரயில்வே துறை தனியார்மயம் ஆகாது

ரயில்வே துறை தனியார்மயம் ஆகாது

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில் வருமாறு:

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டமில்லை. தனியாரிடம் ஒப்படைப்பதற்காக பயணிகள் ரயில் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 21,443 கி.மீ. தொலைவிலான 189 புதிய ரயில் பாதை திட்டங்கள் திட்டமிடல், அனுமதி, பணி நடைபெறுதல் என பல்வேறு கட்டங்களில் உள்ளன. இதுவரை ரயில்பாதை இல்லாத இடங்களை இந்த திட்டங்கள் இணைக்கும்.

கடந்த 1991-ல் ரயில்வே துறையில் 16,54,985 பணியாளர்கள் இருந்தனர். 2019-ல் 12,48,101 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். என்றாலும் இதனால் ரயில்சேவை பாதிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி ரயில்வே துறையில் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளில் மொத்தம் 2,98,574 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் ரயில்வே துறைக்கு 2,94,420 பணியாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதில் 1,51,843 பணியிடங்களுக்கு தேர்வு நடந்துமுடிந்துள்ளது. 1,42,577 பணியிடங்களுக்கு 2019-20-ல் தேர்வு நடைபெறும். இதில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ரயில் சேவையின் தரம் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்தது ஆகும். எனவே ரயில்சேவையின் தரத்தை பணியாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுவது சரியல்ல.

11 நாட்களில் பாஸ்போர்ட் விநியோகம்

வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன்: தற்போது பாஸ்போர்ட் வழங்குவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் மிகவும் குறைந்துள்ளது. வழக்கமான சூழ்நிலையில் ஒருவர் 11 நாட்களில் பாஸ்போர்ட் பெறலாம். தட்கல் முறையில் ஒரே நாளில் பாஸ்போர்ட் பெறலாம். விண்ணப்பதாரர் விவரங்களை போலீஸ் சரிபார்ப்பிற்காக 731 காவல் மாவட்டங்களில் புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

நாட்டில் 36 பாஸ்போர்ட் அலுவலகங்களுடன் 93 பாஸ்போர்ட் சேவை மையங்கள், 412 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களை இயக்குவதில் தனியார் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x