Last Updated : 30 Jun, 2019 12:00 AM

 

Published : 30 Jun 2019 12:00 AM
Last Updated : 30 Jun 2019 12:00 AM

நாடு முழுவதும் யானை தாக்கி 5 ஆண்டில் 2,400 பேர் உயிரிழப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

நாட்டில் யானைகள் தாக்கி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2,400 பேரும், புலிகள் தாக்கி 200-க்கும் மேற்பட்டோரும் பலியாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் யானைகள் தாக்கி 494 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் மற்றும் புலிகள் தாக்கி எத்தனை பேர் இறந்தனர் என்று மக்களவையில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஆன்ட்டோ ஆன்டோனியோ கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நாட்டில் 2014 முதல் 2019 மார்ச் வரை காட்டு யானைகள் தாக்கி 2,398 பேர் இறந்துள்ளனர். இதில் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 5 ஆண்டுகளில் 403 பேர் இறந்துள்ளனர். நாகாலாந்தில் 397 பேரும் ஜார்க்கண்டில் 349 பேரும் இறந்துள்ளனர். யானைகள் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 2017-18-ல் 516 ஆக இருந்தது. இது 2018-19-ல் 494 ஆக குறைந்துள்ளது.

இதுபோல் நாட்டில் புலிகள் தாக்கி கடந்த 5 ஆண்டுகளில் 224 பேர் பலியாகியுள்ளனர். இதிலும் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 71 பேர் இறந்துள்ளனர்.

புலிகள் தாக்கி கடந்த 2017-ல் 44 பேர் இறந்த நிலையில் இது, 2018-ல் 29 ஆக குறைந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் போதிய உணவு கிடைக்காத சூழலில் வன விலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அப்போது வன விலங்குகள் – மனிதர்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்க வனப் பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முள்கம்பி மற்றும் சூரிய மின்சார வேலிகள் அமைத்தல், கள்ளிச்செடிகள் மூலம் தாவர வேலி உருவாக்குதல், சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் புலிகளுக்காக 50 பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) மூலம் ‘புராஜெக்ட் டைகர்’ திட்டத்தின் கீழ் இவை நிர்வகிக்கப்படுகின்றன. உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன. என்டிசிஏ புள்ளிவிவரப்படி, 2006-ல் 1,411 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2010-ல் 1,706 ஆகவும் 2014-ல் 2,226 ஆகவும் உயர்ந்துள்ளது.

2017-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி நாட்டில் 27,312 யானைகள் உள்ளன. 2015 முதல் 2018 வரை 373 யானைகள் இறந்தன. இதில் 2018-ல் மட்டும் 75 யானைகள் இறந்தன. இவ்வாறு அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x