Last Updated : 25 Jun, 2019 02:02 PM

 

Published : 25 Jun 2019 02:02 PM
Last Updated : 25 Jun 2019 02:02 PM

ஜெய் ஸ்ரீராம் நாமத்தை அன்பால் சொல்ல வேண்டும்; வன்முறையால் அல்ல: முக்தர் அப்பாஸ் கருத்து

ஜெய் ஸ்ரீராம் நாமத்தை ஒருவர் மீது அன்பு செலுத்தி சொல்ல வையுங்கள். தாக்குதல் நடத்தி, வன்முறையைச் செலுத்தி சொல்ல வைக்காதீர்கள் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், சரைய்கேலாகார்சவன் மாவட்டத்தைச் சேர்ந்த தப்ரீஸ் எனும் 22 வயது இளைஞரை ஒரு கும்பல் பைக் திருடியதாக கடந்த வாரம் கொடூரமாகத் தாக்கியது. அவரைத் தாக்கும்போது, ஜெய்ஸ்ரீராம், ஜெய் அனுமன் என்று கூறுமாறு அந்தக் கும்பல் கட்டாயப்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்து இளைஞர் தப்ரீஸை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சிகிக்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் தப்ரீஸ் உயிரிழந்தார். அவர் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்து. இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் ஹஜ் பணிகள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, ஜார்க்கண்டில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுப் பேசி கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

''ஜார்க்கண்டில் ஒரு முஸ்லிம் இளைஞரை ஜெய் ஸ்ரீராம் என்று கூறச் சொல்லி ஒரு கும்பல் தாக்கியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் நாம் அன்பால், அரவணைப்பால் ஒருவரை சொல்லவைக்க வேண்டும். இதுபோல் மிரட்டி, தாக்குதல் நடத்தி வன்முறையால் சொல்ல வைக்கக் கூடாது. இதுபோன்ற சம்பவங்களை நாம் நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசு அனைவருக்கும் வளர்ச்சி என்ற திட்டத்தை முன்வைத்துச் செயல்படுகிறது. இதுபோல், சிதைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.

இதுபோன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு ஒரே நோக்கம்தான். நாட்டில் உருவாகியுள்ள ஒற்றுமையான, சுமுகமான சூழலைச் சிதைக்க வேண்டும் என்ற மனநிலைதான். இதுபோன்ற சம்பவங்களை அரசு கடுமையாக எதிர்க்கும். இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x