Last Updated : 21 Jun, 2019 03:30 PM

 

Published : 21 Jun 2019 03:30 PM
Last Updated : 21 Jun 2019 03:30 PM

களையெடுப்பு தொடங்கியது: வங்கிகள், அரசு நிறுவனங்களில் ஊழல் செய்வோர், வேலை செய்யாதவர்களைக் கண்டுபிடிக்க மத்திய அரசு உத்தரவு

வங்கிகள், அரசு நிறுவனங்களில் அனைத்துத் துறைகளிலும் ஊழலை ஒழிக்கவும், வேலை செய்யாதவர்களைக் கண்டுபிடித்து நீக்கவும், ஊழியர்களின் பணித்திறன், பணிக்காலம் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அனைத்து அரசுத்துறை செயலாளர்களுக்கும், கடிதம் எழுதியுள்ளது.

சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேரை கட்டாய ஓய்வில் மத்திய அரசு அனுப்பியது. இதன் மூலம் அரசின் சேவையிலும், பொது வாழ்க்கையிலும் ஊழலை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக இப்போது அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்தியப் பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "அனைத்துத் துறைகளின் செயலாளர்களும் தங்கள் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணித்திறன், மற்றும் பணிக்காலம் ஆகியவை குறித்து சட்டத்துக்கு உட்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு ஊழியரின் பணி சரியில்லை என்று அவரை ஓய்வுபெறச் செய்ய உத்தரவிடும்போது அது தன்னிச்சையாக பிறப்பிக்கும் உத்தரவு அல்ல. அதற்கான உறுதியான காரணம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஆய்வுகளை அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகளும், அரசின் சுயாட்சி நிறுவனங்கள், நிர்வாத்தில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையில் ஒரு ஊழியரை அவரின் பணிக் காலத்துக்கு முன்பாக ஓய்வுபெறச் செய்வது பொதுநலன் கருதிதான் என்பதையும், ஒரு ஊழியரைப் பிடிக்காவிட்டால், அவரின் உயரதிகாரி தன்னிச்சையான முறையில் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான தகுந்த ஆதாரங்கள், ஆவணங்களையும் அளிக்க வேண்டும்.

ஜூலை 15-ம் தேதியில் இருந்து ஒவ்வொரு அமைச்சகத்தின் கீழ் வரும் துறையும், அரசு நிறுவனங்கள், வங்கிகள் அனைத்தும் 15 நாட்களுக்கு ஒருமுறை ஊழியர்கள் குறித்த அறிக்கை தயார் செய்து அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பணியாளர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணியாளர் அமைச்சகத்தின் அடிப்படை விதிகள் 56, மத்திய அரசு ஊழியர்கள் விதிகள் 1972 ஆகியவற்றின் கீழ்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த விதிப்படி ஒரு அரசு ஊழியரின் நம்பகத்தன்மை, நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகும்போது, பணியில் சிறப்பாகச் செயல்படவில்லை என்று கருதினால் அவரை பொதுநலன் கருதி பணிக்காலம் முன்பே பணியில் இருந்து விடுவிக்க முடியும். அதன்படி அரசு அலுவலகங்களில் ஊழலை ஒழிக்கும் பொருட்டும், வேலைசெய்யாத ஊழியர்களைக் கண்டுபிடித்து நீக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x