Last Updated : 21 Jun, 2019 11:55 AM

 

Published : 21 Jun 2019 11:55 AM
Last Updated : 21 Jun 2019 11:55 AM

பிரதமர் மோடியைப் பின்பற்றும் யோகி: ஊழல் செய்பவர்கள், வேலை செய்யாத அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப முடிவு

ஊழல் அதிகாரிகள், பணி செய்யாத அதிகாரிகள் ஆகியோருக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு அளித்து வரும் நிலையில், அதே  பாணியை பின்பற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முடிவு செய்துள்ளார்.

ஊழலற்ற நிர்வாகத்தை மக்களுக்கு அளிப்போம் என்ற வாக்குறுதியில் அடிப்படையில் பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். மத்திய அமைச்சர்களும் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவில்லை. அதேசமயம் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் கடும் தண்டனையும் மத்திய அரசு விதித்து வருகிறது. வேலையில் இருந்து கட்டாய ஓய்வில் அனுப்பப்படுகின்றனர்.

சமீபத்தில் வருமான வரித்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் 15 மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள், பணி செய்யாமை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர்களைக்  கட்டாய ஓய்வில் மத்திய அரசு அனுப்பியது.

இதே நடைமுறையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பின்பற்ற முடிவு செய்துள்ளார். லக்னோவில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர், அரசு மூத்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆதித்யநாத் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தனது நிர்வாகத்தில் எந்தவிதமான ஊழலுக்கும் இடமில்லை. பணி செய்யாத அதிகாரிகளும் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதை திட்டவட்டமாக முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில்  உத்தரப் பிரதேசத்தில், லஞ்சம் வாங்கியதால், 3 செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய ஆதித்யநாத், இதுபோன்ற செயல்களை ஒருபோதும் தாங்கிக்கொள்ள மாட்டேன் என்று கண்டித்துள்ளார்.

தலைமைச் செயலகம், உள்ளிட்ட மற்ற அரசு அலுவலகங்களில் குறைகளைத் தெரிவிக்க வரும் மக்களைத் தவிர்த்த வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அதிகாரிகளைப் பார்க்க அவர்கள் முயன்றால், செல்போன்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் இருக்கும் அதிகாரிகள், வேலை செய்யாமல் மந்தமாகச் செயல்படும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் தொலைக்காட்சி சேனல்களில் உ.பி. அரசு அதிகாரிகள் பலர் லஞ்சம் பெறும் காட்சிகளும், அலுவலகத்தை மிகவும் அசுத்தமாக வைத்திருக்கும் காட்சியையும், மக்களிடம் மோசமாக நடக்கும் காட்சியையும், சுகாதாரமின்மையுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுவதும் ஒளிபரப்பின. இவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய ஆதித்யநாத், அந்தக் குறைகள் களையப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தலைமைச் செயலகத்தைச் சுற்றி எந்தவிதமான சுவரொட்டிகள், பதாகைகள், பேனர்கள் எதுவம் இருக்கக்கூடாது. அவற்றை அகற்ற  வேண்டும் என முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x