Published : 19 Jun 2019 04:01 PM
Last Updated : 19 Jun 2019 04:01 PM

ஆர்.எஸ்.எஸ். வழிமுறையை காங்கிரஸ் கட்சியும் கடைபிடித்தால்தான் முன்னேற்றம்: முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகய் திட்டவட்டம்

தான் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை ஏற்காவிட்டாலும் மக்களை அந்த சங்கம் சென்றடையும் விதம், வழிமுறை அபரிமிதமானது, ஆகவே காங்கிரஸ் கட்சி மக்களைச் சென்றடைய வேண்டுமெனில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் போல் செயல்பட வேண்டும் என்று முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகய் கூறியுள்ளார்.

 

பாஜகவின் முதுகெலும்பான ஆர்.எஸ்.எஸ், கொள்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை ஆனால் மக்களை சென்றடைவதற்கான அதன் வழிமுறைகள் மக்களை வேரடிநிலையிலிருந்து அணுக வேலை செய்கிறது.

 

“காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தடைக்கல் என்னவெனில் வெகுஜன மக்கள் தொடர்பை இழந்ததுதான். எனவே மதக் கொள்கை இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். வழிமுறையைப் பின்பற்றி மக்களுடன் மறுதொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் 2021 சட்டப்பேரவை தேர்தலில் 80 இடங்களை வெல்ல முடியும்” என்றார் தருண் கோகய்.

 

2016-ல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியை அசாமில் பாஜக வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலிருந்து காவிக்கட்சியின் வெற்றிப் பேரணி தொடங்கியது. அதாவது 14 இடங்களில் 7 இடங்களை பாஜக வென்றது.  2019-ல் மேலும் 2 இடங்களைப் பெற்றது.

 

2016 வெற்றியினால் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக காலூன்றியது. தற்போது 8 வடகிழக்கு மாநிலங்களில் 6 மாநிலங்களில் பாஜக தனியாகவோ கூட்டணிக் கட்சியுடனோ சேர்ந்து ஆட்சியமைத்துள்ளது.  மற்ற இரு வடகிழக்கு மாநிலத்தில் பிராந்தியக் கட்சி தேஜகூவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ளது.

 

“அசாமில் மட்டுமல்ல வடகிழக்கு முழுதும் ஆர்.எஸ்.எஸ். எப்படி சமூக-கலாச்சார அமைப்புகள் மூலம் வெகுஜன மக்களிடம் சென்றடைந்ததோ அதே வழிமுறையை காங்கிரஸ் பின்பற்ற வேண்டும்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் பெரிய அளவில் பாஜகவுக்கு வெகுஜன தொடர்பை ஏற்படுத்தியது. எனவே மக்களின் ஆசைகள், விருப்பங்கள், தேவைகளை காங்கிரஸ் கட்சியும் புரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ். வழிமுறையைக் கடைபிடிக்க வேண்டும், அப்போதுதான் இழந்த அடித்தளத்தை மீட்க முடியும்.

 

எனவே காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் போன்று ஒரு அமைப்பை உருவாக்கி வெகுஜன மக்களைத் திரட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளைக் கணித்து பாஜக தலைமை அரசைக் குறிவைத்து 80 இடங்களைப் பெற இன்னும் நீண்ட தூரம் காங்கிரஸ் செல்ல வேண்டியுள்ளது என்று கோகய் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x