Last Updated : 18 Jun, 2019 04:37 PM

 

Published : 18 Jun 2019 04:37 PM
Last Updated : 18 Jun 2019 04:37 PM

ஒரு தேசம் ஒரே தேர்தல் குறித்து வெள்ளை அறிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு

ஒரு தேசம், ஒரே தேர்தல் என்ற வாசகத்தை முன்வைத்து பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வர இயலாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அவசர கதியில் ஒரே தேசம், ஒரே தேர்தல் விஷயத்தைச் செய்யக்கூடாது. அது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தையும் மம்தா பானர்ஜி புறக்கணித்த நிலையில், இந்தக் கூட்டத்தையும் அவர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓரு தேசம், ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் கட்சியின் தலைவர் அனைவரையும் சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நாளை டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்ககப்பட்டு இருந்தது. இந்த விஷயம் மட்டுமல்லாமல் 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இவை குறித்து விவாதிக்கவும், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசவும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் நாளை மறுநாள் எம்.பி.க்களுக்கு இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''ஒரு தேசம், ஒரே தேர்தல் போன்ற தீவிரமான, உணர்வுப்பூர்வமான விஷயத்துக்கு குறுகிய காலகட்டத்தில் நீதி ஏதும் கிடைத்துவிடாது. அதிகமான ஆலோசனைகள், சட்ட வல்லுநர்கள், தேர்தல் வல்லுநர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் பேச்சு நடத்த வேண்டும்.

ஒரு தேசம், ஒரே தேர்தல் எனும் விஷயத்தை அவசர கதியில் செய்வதற்குப் பதிலாக, இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு வெளியிட்ட பின், அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து கருத்துகளைக் கேட்கலாம். இதைச் செய்தால், இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் உறுதியான கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.

அனைத்து மாவட்டங்களிலும் ஒரேமாதிரியான, எந்தவிதமான ஏற்ற, இறக்கம் அற்ற சமூகப் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவர எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினம், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ஆகியவற்றில் எங்களின் கட்சி  பங்கேற்கும். மேலும் மக்களவையில் ஆக்கப்பூர்வமான வேலைநாட்கள் நடைபெறத் தேவையான முயற்சிகளை எடுக்க அமைச்சகத்திடம் பேச வேண்டும்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x