Published : 18 Jun 2019 03:03 PM
Last Updated : 18 Jun 2019 03:03 PM

‘வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்’ -மக்களவையில் பதவியேற்ற அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்

மக்களவையில் இன்று பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது.  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, தெலுங்கு என பல மொழிகளிலும் பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் எம்.பி.க்கள் பதவி ஏற்கின்றனர். தமிழக எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். தொகுதி வரிசை வாரியாக இவர்கள் பதவி ஏற்றனர். இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றார். காந்தி, அம்பேத்கர், காமராஜர் வாழ்க என்று கூறி அவர் பதவியேற்றார். இதுபோலவே வட சென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பதவியேற்றார். தொடர்ந்து தமிழக எம்.பி.க்கள் தயாநிதி மாறன் பெரியார், கருணாநிதி வாழ்க எனக் கூறி பதவியேற்றார்.

கரூர் தொகுதி எம்.பி ஜோதி மணி பதவியேற்றபோது வாழ்க தமிழ், வாழ்க தாயகம் எனக் கூறினார்.   

பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் பதவியேற்றுக் கொண்டபோது ‘தமிழகம் வாழ்க, இந்தியாவும் வாழ்க’ என கூறி முடித்தார்.

சிதம்பரம் தொகுதி எம்.பி. தொல்.திருமாவளன், ‘அம்பேத்கர் பெரியார் வாழ்க, ஜனநாயகம் சமத்துவம் வெல்க’ எனக் கூறி முடித்தார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி ஆகியோரும் கடவுளின் பெயரில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். .

மதுரை தொகுதி எம்.பியாக பதவியேற்றுக் கொண்ட சு.வெங்கேடசன் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழ் வாழ்க மார்க்சியம் வாழ்க எனக் கூறினார்.  

தேனி தொகுதியாக பதவியேற்றுக் கொண்ட அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க, வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் எனக் கூறினார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x