Last Updated : 18 Jun, 2019 02:17 PM

 

Published : 18 Jun 2019 02:17 PM
Last Updated : 18 Jun 2019 02:17 PM

முசாபர்பூர் வந்த நிதிஷ் குமாருக்கு மக்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு: குழந்தைகளைப் பார்க்காமல் திரும்பினார்

மூளைக் காய்ச்சலில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான முசாபர்நகர் மாவட்டத்துக்கு இன்று வந்த முதல்வர் நிதிஷ் குமாருக்கு குழந்தைகளின் உறவினர்கள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர்.

இதனால், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்க்காமல் மருத்துவர்களுடன் சிறிதுநேரம் ஆலோசனை நடத்திவிட்டு நிதிஷ் குமார் சென்றுவிட்டார்.

பிஹார் மாநிலம் முசாபர்பூரில் திடீர் காய்ச்சல் காரணமாக  ஜூன் 1-ம் தேதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கேஜ்ரிவால் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ஏராளமான குழந்தைகள் பலியானார்கள். தொடக்கத்தில் குழந்தைகள் சாதாரணமான காய்ச்சலால் இறந்ததாக மாநில அரசு தெரிவித்த நிலையில் பின்னர் அது மூளைக் காய்ச்சல் என பிஹார் அரசு அறிவித்தது. கடந்த சில நாட்களாக மட்டும் மூளைக் காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்  டெல்லி சென்று இருந்த முதல்வர் நிதிஷ் குமார் நேற்று நண்பகலில் பாட்னா திரும்பினார். அங்கு முசாபர்நகரில் நிலவும் சூழல் குறித்து, உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் குழு ஆகியோரிடம் நிதிஷ் குமார் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின், குழந்தைகளுக்கான சிகிச்சையை தீவிரப்படுத்துவது என்றும், குழந்தைகளுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அதற்குரிய செலவுகளை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தது. முன்னதாக, பலியான குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் தெரிவித்திருந்தார்.

மேலும், முசாபர்பூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவர் குழுக்கள் செல்ல உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கு அருகே இருந்த வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தீவிரப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை முசாபர்பூர் நகரில் உள்ள கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் நிதிஷ் குமார் சென்றார். இந்த மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் நிதிஷ் குமாருடன், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, அமைச்சர்கள், எம்எல்ஏ சுரேஷ் சர்மா ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று சூழலை ஆய்வு செய்தார்கள். மேலும் அங்கிருந்த மருத்துவர்களுடன் முதல்வர் நிதிஷ் குமார் ஆலோசனை நடத்தினார்.

ஆனால், முதல்வர் நிதிஷ் குமார் வந்திருப்பதை அறிந்த குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர் ஆத்திரமடைந்து மருத்துவமனை முன் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். நிதிஷ் குமார் திரும்பிப் போ  என்று ஆவேசமாக கோஷமிட்டனர். குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர் விட்டபடியே கோஷமிட்டனர்.

இதனால், முதல்வர் நிதிஷ் குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகளைச் சந்திக்காமல் திரும்பிச் சென்றார்.

மருத்துவமனையின் முன் திரண்டிருந்த மக்கள் நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பே முதல்வர் நிதிஷ் குமார் இங்கு வந்திருந்தால், ஏராளமான குழந்தைகள் உயிர் பிழைத்திருக்கும். மக்களும் அவர் மீது நல்ல மரியாதையை வைத்திருப்பார்கள். ஆனால், 100 குழந்தைகள் இறந்த பின் வந்துள்ளார்" என ஆதங்கப்பட்டனர்.

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மருத்துவக் குழு ஒன்று, கடந்த வார இறுதியில் முசாபர்நகர் மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x