Last Updated : 17 Jun, 2019 12:00 AM

 

Published : 17 Jun 2019 12:00 AM
Last Updated : 17 Jun 2019 12:00 AM

போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: இளநிலை மருத்துவர்கள் அறிவிப்பு

‘‘மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். அதற்கான இடம் பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் நேற்று அறிவித்தனர்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை இரவு நோயாளி ஒருவர் இறந்தார். அதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 2 இளநிலை மருத்துவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இளநிலை மருத்துவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி முன்வரவில்லை.

இதையடுத்து இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவாக 300 மருத்துவர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக பல இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதையடுத்து தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மம்தா நேற்றுமுன்தினம் 2 முறை அழைப்பு விடுத்தார். அதை போராட்டம் நடத்தி வரும் இளநிலை மருத்துவர்கள் நிராகரித்தனர்.

அதன்பின், மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாகவும், பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் மம்தா கோரிக்கை விடுத்தார். அதையும் இளநிலை மருத்துவர்கள் நிராகரித்தனர். ‘‘மம்தாவின் முயற்சி நேர்மையானதாக இல்லை. பேச்சுவார்த்தை நடத்த என்ஆர்எஸ் மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா வரவேண்டும்’’ என்று குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இளநிலை மருத்துவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து கூறும்போது, ‘‘முதல்வர் மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். மம்தா ஒரு கரம் நீட்டினால், நாங்கள் 10 கரம் நீட்டுவோம். தற்போது நிலவும் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறோம். ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, ‘‘நாங்கள் பணிக்குத் திரும்ப காத்திருக்கிறோம். ஆனால், தற்போது நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு காண முதல்வர் மம்தாவிடம் இருந்து இதுவரை எந்த நேர்மையான முயற்சியும் எடுக்கப்படவில்லை’’ என்று கூறினர்.

இதற்கிடையில், இளநிலை மருத்துவர்களின் போராட்டத்தில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x