Published : 15 Jun 2019 11:58 AM
Last Updated : 15 Jun 2019 11:58 AM

‘‘முதலில் மன்னிப்பு கேளுங்கள்; அதன் பிறகே பேச்சுவார்த்தை’’ - மம்தா அழைப்பை நிராகரித்த அரசு மருத்துவர்கள்  

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள அரசு மருத்துவர்கள், அவர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள மருத்துவகல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் அவரது  உறவினர் ஒருவர் இளநிலை மருத்துவரை கடுமையாக தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து மேலும் ஒரு அரசு இளநிலை மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளநிலை மருத்தவர்களுக்கு ஆதரவாக அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மட்டுமின்றி பல நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மேற்குவங்க அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மேற்குவங்க மாநில தலைமைச் செயலகத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இதனை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.

இதுகுறித்து அரசு இளநிலை மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் தத்தா கூறியதாவது:

‘‘கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மருத்துவர்களை தவறாக சித்தரித்தும், மிரட்டும் தொனியிலும் பேசினார். தனது பேச்சுக்காக அவர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதே மருத்துவமனைக்கு வந்த நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதன் பிறகே நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர முடியும். அதுவரை மேற்குவங்கத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடரும்’’ என அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x