Published : 08 Jun 2019 02:47 PM
Last Updated : 08 Jun 2019 02:47 PM

‘‘எனக்கு வாரணாசியும் கேரளாவும் ஒன்று தான்’’ - குருவாயூரில் பிரதமர் மோடி பேச்சு

எனக்கு வாரணாசியும், கேரளாவும் ஒன்று தான், 130 கோடி மக்களுக்கும் நாங்கள் சேவை செய்வோம் என பிரதமர் மோடி பேசினார்.

பிரதமராக 2-ம் முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி நேற்று இரவு கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தந்தார்.  அங்கு இரவு தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை  தனி ஹெலிகாப்டர் மூலம் குருவாயூருக்கு வந்தார். கோயில் ஓய்வறைக்கு சென்ற அவர் கோயில் சம்பிரதாயப்படி வேட்டி அணிந்தார். பின்னர் கோயிலுக்குச் சென்ற அவருடன் கேரள ஆளுநர் சதாசிவம், அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

கோயில் சார்பில் அவருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் கோயிலுக்கு துலாபாரமாக, எடைக்கு எடை தாமரை மலர்களை அளித்தார். பின்னர் கதலி பழம், நெய், காசு உட்பட மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கோயிலுக்கு நேர்த்தி கடன்களை செய்தார்.

பிரதமர் மோடி, கோயில் வழிபாட்டை முடித்துவிட்டு, குருவாயூரில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மக்களின் தீர்ப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். கேரளாவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது. உங்களுடனும்,  கேரள அரசுடனும் மத்திய அரசு உறுதியாக நிற்கும். நிபா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெற அனைத்து வசதிகளையும் வழங்க மத்திய அரசு ஒத்துழைக்கும்.

கிராமப்புற மற்றும் கடலோரப் பொருளாதாரத்தை வலுப்படுத்த மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு தனியான அமைச்சகத்தை இந்தமுறை ஏற்படுத்தியுள்ளோம். நாங்கள் நாடு முழுவதும்  விலங்குகளுக்கு ஒரு தடுப்பூசி இயக்கத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.மக்களின் தீர்ப்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரளாவில் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் மோடி ஏன் கேரளா செல்கிறார் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் இது நமது கலாச்சாரம். எங்களின் சிந்தனைகள் அதை பற்றியே இருக்கும்.

தேர்தலுக்கு பிறகு 130 கோடி மக்களை முன்னெடுத்து எங்களின் பொறுப்பு உள்ளது. எங்களை வெற்றி பெற செய்தவர்களாக இருந்தாலும், வெற்றிக்கு பாடுபடாதவர்களாக இருந்தாலும் நாங்கள் நாங்களாகவே இருப்போம். எனக்கு குருவாயூரும், வாரணாசியும் ஒன்று தான்.

365 நாட்களும் உழைப்பவர்கள் பாஜக தொண்டர்கள். வெற்றியும், தோல்வியும் நமது இலக்கை பாதிக்காது. கேரளாவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என அரசியல் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் உள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x