Last Updated : 08 Jun, 2019 01:26 PM

 

Published : 08 Jun 2019 01:26 PM
Last Updated : 08 Jun 2019 01:26 PM

பொய், நஞ்சு, வெறுப்பு கலந்த மோடியின் மக்களவைப் பிரச்சாரம்: ராகுல் காந்தி தாக்கு

பொய்கள், நஞ்சு, வெறுப்பு கலந்துதான் பிரதமர் மோடியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி உண்மை, அன்பு, கருணை ஆகியவற்றின் பக்கம் நிற்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

மக்களவைத் தேர்தலில் வயநாடு, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் வாக்குகளில் ராகுல் தோல்வி அடைந்தார்.

ஆனால், வயநாட்டில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி சிறப்பான வெற்றி பெற்றார். தன்னை வெற்றி பெற வைத்த மக்களைச் சந்தித்து நன்றி செலுத்த வயநாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக ராகுல் காந்தி நேற்று வந்தார். முதல் நாளான நேற்று  மலப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திறந்தவெளி வேனில் நின்று கொண்டு ராகுல் காந்தி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சாலையின் இருபுறங்களிலும் மக்கள் வரிசையாக நின்று ராகுல் காந்தியை வரவேற்றார்கள்.

இந்நிலையில் 2-ம் நாளான இன்று கல்பேட்டா நகரில் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''பிரதமர் மோடியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் நஞ்சு, வெறுப்பு, பொய்களால் நிரம்பி இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி எப்போதும் உண்மை, அன்பு, மற்றும் கருணைக்கு ஆதரவாக இருக்கும். மோடியின் பொய்களுக்கு எதிராகவும் அவரின் வெறுப்புக்கு எதிராகவும் அன்புடன் போராடும்.

பிரதமர் மோடி கோபம், பொய்கள், சகிப்பின்மை ஆகியவற்றின் உருவகமாக இருக்கிறார். இது நாட்டின் மோசமான உணர்வுகளின் வெளிப்படாகும். தேசிய அளவில் நாங்கள் விஷத்தை எதிர்த்துப் போரிட்டு வருகிறோம். பிரதமர் மோடியின் பிரச்சாரத்தில் பொய்கள், விஷம், மக்களைப் பிரித்தாளும் தன்மை ஆகியவை நிரம்பி இருந்தது. தேர்தலில் பொய்களை மோடி பயன்படுத்தினார்.

காங்கிரஸ் கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக உருவெடுத்து, ஏழைகளின் உரிமையைக் காக்கும். பிரதமர் மோடியிடம் பணம் இருக்கலாம், ஊடகம் அவரின் பக்கம் இருக்கலாம், அவருக்கு அதிகமான வசதியான நண்பர்கள் இருக்கலாம். ஆனாலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜகவின் சகிப்பின்மைக்கு எதிராகப் போராடும்.  பாஜக மற்றும் மோடியால் உருவாக்கப்படும் சகிப்பின்மையை காங்கிரஸ் கட்சி அன்பால் முறியடிக்கும்''.  

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x