Published : 08 Jun 2019 01:11 PM
Last Updated : 08 Jun 2019 01:11 PM

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் ஒருவார கால தாமதத்துக்குப் பிறகு தென்மேற்கு பருவமழை  தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கேரளாவில் பல இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

நாடுமுழுவதும் இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தியது. வட மாநிலங்களில் இந்தக் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. ராஜஸ்தானில் வெயில் மண்டையைப் பிளக்கிறது. மிக அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமையன்று 123 டிகிரி வெயில் சுட்டெரித்தது. உலகிலேயே வெப்பமான பகுதியாக இங்குள்ள சுரு என்ற நகரம் உள்ளது.

இதனால் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்ற ஏக்கம் நாடுமுழுவதும் உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கினால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை மையம் ஏற்கெனவே கூறியிருந்தது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கும். இந்த ஆண்டு மழை தொடங்குவதில் தாமதம் நீடித்து வந்தது.

தென்மேற்கு பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 70 சதவீத வருடாந்திர மழை கிடைக்கிறது. தென் மேற்கு பருவ மழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது.

இந்தநிலையில் சில நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி எம்.மொஹாபத்ரா அளித்த பேட்டியில், ‘‘கேரளாவில் இன்று பருவமழை தொடங்கியது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், புனலூர், தலச்சேரி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அடுத்த இரு தினங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’’’ என்றார்.

முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் எனக் கூறியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x