Published : 08 Jun 2019 10:57 AM
Last Updated : 08 Jun 2019 10:57 AM

குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் பிரதமர் மோடி: எடைக்கு எடை தாமரை மலர்கள் தந்து வழிபாடு

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலுக்குச் வேட்டி அணிந்து பாரம்பரிய முறைப்படி சென்ற பிரதமர் மோடி துலாபாரமாக எடைக்கு எடை தாமரை மலர்களை வழங்கி வழிபாடு நடத்தினார்.

பிரதமராக 2-ம் முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி நேற்று இரவு கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தந்தார்.  அங்கு இரவு தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை  தனி ஹெலிகாப்டர் மூலம் குருவாயூருக்கு வந்தார். கோயில் ஓய்வறைக்கு சென்ற அவர் கோயில் சம்பிரதாயப்படி வேட்டி அணிந்தார். பின்னர் கோயிலுக்குச் சென்ற அவருடன் கேரள ஆளுநர் சதாசிவம், அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

கோயில் சார்பில் அவருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் கோயிலுக்கு துலாபாரமாக, எடைக்கு எடை தாமரை மலர்களை அளித்தார். பின்னர் கதலி பழம், நெய் காசு உட்பட மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கோயிலுக்கு நேர்த்தி கடன்களை செய்தார்.

பின்னர் கோயில் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது கோயிலில் மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட பணிகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் மனு அளித்தனர்.  பிரதமர் மோடி, கோயில் வழிபாட்டை முடித்துவிட்டு, குருவாயூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். பின்னர் பிற்பகலில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

2008-ம் ஆண்டு குஜராத் முதல்வராக அவர் 2-ம் முறை பொறுப்பேற்ற போதும்  குருவாயூர் கோயிலில் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x