Last Updated : 07 Jun, 2019 06:43 PM

 

Published : 07 Jun 2019 06:43 PM
Last Updated : 07 Jun 2019 06:43 PM

உத்தரப் பிரதேசத்தில் நேற்றிரவு கடுமையாகத் தாக்கிய தூசிப்புயல்: 19 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம்

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான தூசிப்புயல் மற்றும் மின்னல் காரணமாக 19 பேர் உயிரிழந்தனர். வீடுகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 48 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவிலான நிவாரண நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உபியின் மெயின்புரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவில் கடுமையான தூசிப்புயல் வீசியது.

இதன்மோசமான பாதிப்பினால் சுவர்கள் இடிந்து விழுந்து, மின்னல் தாக்கி என தனித்தனி நிகழ்வுகளில் நேற்றிரவு 6 பேர் உயிரிழந்ததாக அரசாங்க நிவாரண ஆணையாளர் தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் 41 பேர் படுகாயமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூசிப்புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகள் தூசிப்புயலால் சூழப்பட்டு வாகனங்கள் வரும் பாதைகள் மறைக்கப்பட்டன. இதனால் நெடுஞ்சாலைகளில் கணிசமான அளவிலான மிகப்பெரிய அளவுக்கு போக்குவரத்து பாதிப்பை மக்கள் எதிர்கொண்டனர்.

இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், தூசிப்புயல் பெருக்கெடுத்து வரும்போது மக்கள் வீடுகளுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். மண் வீடுகளின் சுவர்கள் சரிந்து விழுந்தன. இதனுடன் தூசிப்புயலும் சேர்ந்து தாக்கியதால் பெரும்பாலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச நிவாரண ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பல இடங்களில் பெயர்ப்பலகைகளும், ஹோர்டிங்ஸ்களும் கீழே இருந்த மக்கள் மீது சரிந்துவிழுந்ததால் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. மெயின்புரி மாவட்டத்தில் ஆறுபேரும், ஏதாக் மற்றும் காஸ்கன்ச் மாவட்டங்களில் தலா மூன்று பேரும் மொராதாபாத், படாவூன், பிலிபிட், மதுரா, கன்னோஜ், சாம்பால் மற்றும் காஸியபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின்போது மாநிலத் தலைநராக லக்னோ உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டது. 8 பசுக்களும் இதில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவாரணத்திற்கு முதல்வர் உத்தரவு

மாவட்டப் பொறுப்பிலுள்ள அமைச்சர்கள் இதற்கான அதிகாரிகளுக்கு உடனே உத்தரவுகள் வழங்கி நிவாரணங்களை அளிக்கும்பணிகளை தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக முதன்மைச் செயலாளர் அவானிஷ் அவாஸ்தி தெரிவித்தார்.

நிலைமை நேரில் அறிந்து தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தூசிப் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வரின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x