Last Updated : 07 Jun, 2019 03:22 PM

 

Published : 07 Jun 2019 03:22 PM
Last Updated : 07 Jun 2019 03:22 PM

ராகுல் முடிவில் மாற்றமில்லை: காங்கிரஸ் கட்சிக்கு இரு செயல் தலைவர்கள் நியமனம்?- தென்மாநிலத்துக்கு வாய்ப்பு

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி எடுத்த முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு இரு செயல்தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாத தனது முடிவை தளர்த்திக்கொள்ளாமல் இருந்து வருகிறார். விரைவில் கூடவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவர் நியமிக்காமல் இரு செயல்தலைவர்கள் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்த இரு செயல்தலைவர்களில் ஒருவர் தென் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பார். அதுமட்டுமல்லாமல் இரு செயல்தலைவர்களும் எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பினராக இருப்பார்கள் எனத் தெரிகிறது.

இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், " காங்கிரஸ் கட்சிக்கு இரு செயல்தலைவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதில்ஒருவர் சுஷில்குமார் ஷிண்டே, மற்றொருவர் மல்லிகார்ஜுன கார்கே இருவருக்கு வாய்ப்பு இருக்கிறது. இளம் தலைவர் என்ற முறையில் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த செயல்தலைவர்கள் குறித்த அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக இருக்கும்

தொடக்கத்தில் 3 முதல் 4 செயல்தலைவர்கள் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது. மேலும் பல இடங்களில் இளம் தலைவர்களுக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது இதை குறைக்கவே 2 செயல்தலைவர்கள் முறை கொண்டுவரப்படுகிறது " எனத் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் மக்களவைத் தேர்தலில் முழுமனதுடன், தீவிரமாக செயல்படாத மாநிலத் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மக்களவைத் தேர்தலில் அவரின் மகன் வைபவ்  தோல்வியால் சோர்ந்துள்ளார். தனது மகனின் தோல்விக்கு மாநிலத் தலைவர் சச்சின் பைலட்தான் காரணம் என்று அசோக் கெலாட் குற்றம்சாட்டி வருகிறார். இதுபோன்ற பூசல்களுக்கும் முடிவு கட்டப்படும் எனத் தெரிகிறது.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x