Published : 07 Jun 2019 02:22 PM
Last Updated : 07 Jun 2019 02:22 PM

மம்தா பானர்ஜியுடன் ஒப்பந்தம்:  நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியிலிருந்து வெளியேறுகிறார் பிரசாந்த் கிஷோர்?

தேர்தல் வியூக ஜாம்பவான் பிரசாந்த் கிஷோர் , திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளதையடுத்து, விரைவில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் பாஜக மே.வங்கத்தில் பாஜக எதிர்பாராத வெற்றியைப் பெற்று 18 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக கண்டுள்ள முன்னேற்றத்தையடுத்து அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் மட்டுமல்லாது திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால், மாநிலத்தில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில்,  திரிணமூல் தலைமை மம்தா பானர்ஜி வியூகங்களுக்குத் தயாராகி வருகிறார்  இதன் ஒருபகுதியாகவே தேர்தல் வியூக வகுப்பு ஜாம்பவான் பிரசாந்த் கிஷோருடன்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது, மம்தா பானர்ஜியுடன் இணைந்து வரும் 2021ம் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்ற ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசியலை கார்ப்பரேட் அந்தஸ்துக்கு உயர்த்திய பிரசாந்த் கிஷோர் தொடக்கத்தில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகப் பணியாற்றி அமோக வெற்றி பெற   வ வைத்தார். அதன்பின் பிஹாரில் நிதிஷ், காங்கிரஸ், லாலூ கூட்டணிக்காக பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர்.

அதன்பின், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பிரசாந்த் கிஷோர் துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினாலும், கடைசிநேரத்தில் அவரால் அவரின் திட்டத்துக்கு ஏற்றார்போல் காங்கிரஸ்கட்சியால் பணியாற்ற முடியாததால் தோல்வி அடைந்தது.

இதற்கிடையே ஆந்திராவில் நடந்த  சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை பெரிய அளவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்ததில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில்தான் பிரசாந்த் கிஷோரின் உதவியை மம்தா பானர்ஜி நாடியுள்ளார். மம்தாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தமும் கையொப்பமாகியுள்ளது.

மம்தாவுடன் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதால், தற்போது இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் விரைவில் வெளியேறுவார் எனத் ஜேடியு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜேடியு கட்சியில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து சில நாட்கள் அளவில் மட்டுமே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஜேடியு கட்சியின் செய்தித்தொடர்பாளர் அஜெய் அலோக்  ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் " பிரசாந்த் கிஷோர் தற்போது கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார். ஒரு செயல்பாட்டாளர் என்ற ரீதியில்தான் அவர் கட்சியில் வந்து சேர்ந்தார்.  அவர் கட்சியின் துணைத் தலைவராகத் தொடர்வதும், தேர்தல் வியூகத்தை வகுப்பவராகவும் தொடர்வது பிரசாந்த் விருப்பம்தான். இதில் நாங்கள் என்ன செய்ய முடியும். அவரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தலைவர் நிதிஷ்குமார்தான் முடிவு செய்வார் " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பிரசாந்த் கிஷோர் சந்தித்தது பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தெரியாமல் நடந்துள்ளது. அதுகுறித்த தகவல் ஏதும் சந்திப்பு நடக்கும்வரை அவருக்கு தெரியாது என்று ஜேடியு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உரசல் போக்கு நிலவுகிறது. நிதிஷ்குமார் மீது இருக்கும் அதிருப்தியை சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் இரு இடங்களில் வெளிப்படுத்தினார். இதனால், கட்சிக்குள்ளேயே பிரசாந்த் கிஷோர் தனிமையில் இருந்துள்ளார்.

இதன்வெளிப்படாகத்தான் சமீபத்தில் முசாபர்பூர் பல்கலையில் மாணவர்கள் மத்தியில் பேசிய பிரசாந்த்கிஷோர் " என்னால் பிரதமரையும், முதல்வரையும் உருவாக்க முடியும் போது என்னால், எம்.பி., எம்.எல்ஏக்களை உருவாக்க முடியாதா" எனப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x