Last Updated : 04 Jun, 2019 03:04 PM

 

Published : 04 Jun 2019 03:04 PM
Last Updated : 04 Jun 2019 03:04 PM

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய காஷ்மீர் கதுவா சிறுமி பலாத்கார கொலை வழக்கு: வரும் 10-ம் தேதி தீர்ப்பு

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பழங்குடியின சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில் வரும் 10-ம் தேதி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு முதலில் கதுவா மாவட்ட நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்ற தலையீட்டில் வழக்கு பஞ்சாப் மாநிலம், பதான்கோட் சிறப்பு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டு நாள்தோறும் விசாரணை நடந்து வந்தது.

காஷ்மீர மாநிலம் கதுவா மாவட்டம், ரசானா கிராமத்தில் பழங்குடியின சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சிறுமியின் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தக் கொலையால் பெண் குழந்தைகளுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை எனக் குற்றம் சாட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நள்ளிரவில் டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் ரசானா கிராமத்தின் தலைவர் சஞ்சி ராம், அவரின் மகன் விஷால், சஞ்சி ராமின் நண்பர் ஆனந்த் தத்தா, ஆதாரங்களை அழிக்க முயன்ற இரு சிறப்பு போலீஸ் கான்ஸ்டபிள்கள், ஒரு துணை ஆய்வாளர் என 8 பேரைக் கைது செய்தனர்.

இச்சம்பவம் நடந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி கட்சியும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்திருந்தன.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் சவுத்ரி லால் சிங், சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் பங்கேற்றதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இரு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

இந்த வழக்கு தொடக்கத்தில் கதுவா மாவட்ட நீதிமன்றத்தில்தான் நடந்தது. ஆனால், அங்கு நடந்தால் விசாரணை நியாயமாக நடக்காது என்று வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை, தடயவியல் ஆய்வு அறிக்கை ஆகியவற்றையும், சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்த விசாரணை தற்போது முடிந்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், "கதுவா சிறுமி பலாத்கார கொலை வழக்கின் விசாரணை நாள்தோறும் நடந்தது. அனைத்து சாட்சிகள், இரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் ஆகியவை முடிந்துவிட்டன. இந்த வழக்கில் தீர்ப்பு விரைவாக வெளியிட வேண்டும் என்பதால், வரும் 10-ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x