Published : 27 May 2019 03:28 PM
Last Updated : 27 May 2019 03:28 PM

ராஜினாமாவை திரும்பப் பெற ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு?- சமரச முயற்சி கைகூடவில்லை

மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து கடும் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முன் வந்துள்ள நிலையில் அவரை சமரசம் செய்ய மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறத் தவறிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை இந்தமுறை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற முடியவில்லை.

அதிலும் 39 ஆண்டுகளாக அமேதி தொகுதியில் நேரு குடும்பத்தினர் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை தேர்தலில் ஸ்மிருதி இராணியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோல்வி அடைந்தது பாதிப்படையச் செய்துள்ளது.

இந்தத் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து கோபத்தில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

 ஆனால், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அவரை சமாதானம் செய்து அமரவைத்துள்ளனர். ராகுலின் ராஜினாமாவையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

ராகுல் காந்தி, சிதம்பரத்தைப் பார்த்து," தனது மகனுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று சிதம்பரம்  மிரட்டல் விடுத்தாக ராகுல் காந்தி கூறி வேதனை தெரிவித்தாகவும் தகவல் வெளியானது. பிரச்சாரத்தில் மூத்த தலைவர்கள் பலரம் ஒதுங்கி இருந்ததாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அப்போது தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸூக்கு மக்கள் கொடுத்துள்ளனர், இதுபோன்ற நிலையில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு வேதனை அளிப்பதாக கூறி மூத்த தலைவர் சிதம்பரம் கண்ணீர் வடித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.

ராஜினாமாவை திரும்பப் பெற அவர் தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில்பெரும் புயலை கிளப்பி வருகிறது.

இந்தநிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான அகமது படேல் மற்றும் வேணுகோபால் ஆகியோர் இன்று காலை ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்துக்கு வெளியே ஒரு தலைவரை தேர்வு செய்யுங்கள் என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x