Published : 25 May 2019 05:17 PM
Last Updated : 25 May 2019 05:17 PM

பாஜகவுக்கு அணிமாற தயாராகும் திரிணமூல் எம்எல்ஏக்கள்: தேர்தலைத் தொடர்ந்து மம்தாவுக்கு அடுத்த நெருக்கடி

மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் பாஜகவுக்கு அணி மாறத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏக்கள் பலரும் பாஜக நிர்வாகிகளுடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளிடம் இருந்து ஆட்சியைப் பறித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் கோலோச்சிய நிலையில், பாஜகவின் திடீர் வளர்ச்சி, எழுச்சி மம்தாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மம்தா கட்சி கடந்த ஆண்டு பெற்ற தொகுதிகளில் பலவற்றை இழந்து  22 இடங்களை மட்டுமே பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்கள் பெற்ற பாஜக 18 இடங்களையும் வென்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக கைப்பற்றியுள்ள 18 தொகுதிகளில் மொத்தம் 129 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. அதாவது 129 தொகுதிகளில் வெல்லக்கூடிய அளவுக்கு பாஜகவுக்கு வலிமை உள்ளது. இதனால் அடுத்த 2 ஆண்டுகளில் மே.வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜகவின் இந்த வளர்ச்சி மம்தாவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

தேர்தல் தோல்வி ஒருபுறம் என்றால் மறுபுறம் கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கும் மம்தா பானர்ஜி தள்ளப்பட்டுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரையும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்களுடன் பாஜக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

மேற்கு வங்க அரசுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் சிக்கியுள்ளனர். இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவை விசாரணை நடத்தி வருகிறது. பல இடங்களில் அதிரடி சோதனைகள் ஏற்கெனவே நடந்துள்ளன. வரும் காலத்தில் இது அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

இதனால் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி‘‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன், அவர்கள் கட்சியில் இருந்து விலகிவிடுவார்கள். அரசியல் களத்தில் மம்தா சறுக்கப்போகிறார்’’ என ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.

எனவே திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அணிமாறக்கூடும் என என்ற அச்சம் மம்தாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x