Published : 23 May 2019 07:27 PM
Last Updated : 23 May 2019 07:27 PM

நேரு, இந்திராவுக்குப் பின் தனிப் பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர்கள்  ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பின் தனிப் பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் பிரதமர் எனும் பெருமையையை நரேந்திர மோடி பெறுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வென்று  ஆட்சியைப் பிடித்தது

தற்போது 17-வது மக்களவை தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படாத நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைக் கடந்து பாஜக கட்சி செல்லும் என அரசியல் வட்டாரங்களில் கணிக்கப்பட்டுள்ளது.

ஆக, 2-வது முறையாக தனிப் பெரும்பான்மையுடன் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி மத்தியில் அடுத்த சில நாட்களில் அமைய இருக்கிறது.

இதேபோன்று தனிப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து இருமுறை மட்டுமே நாட்டில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் தலைமையில் மட்டுமே ஆட்சி அமைந்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பின், 1951-52-ம் ஆண்டு நடந்த தேர்தல்,  1957-ம் ஆண்டு நடந்த தேர்தல், 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நேரு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.

சுதந்திரம் பெற்று நாட்டில் 1951-ம் ஆண்டு நடந்த தேர்தல் 5 மாதங்கள் நடந்தது. 1951 அக்டோபர் முதல் 1952 பிப்ரவரி மாதம் வரை நடந்தது.

நாட்டின் முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாரதிய ஜன சங்கம், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி, எஸ்சிஎப் கட்சி, சோசலிஸ்ட் கட்சி ஆகியவை போட்டியிட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 489 இடங்களில் 364 இடங்களை வென்றது. அதாவது 45 சதவீத வாக்குகளைக் கைப்பற்றியது.

அதன்பின் 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு பல்வேறு நெருக்கடிகளுடன் தேர்தலை எதிர்கொண்டார். வலதுசாரிகள் எதிர்ப்பை மீறி இந்து திருமணச் சட்டத்தை கொண்டுவந்தார்.

அதுமட்டுமல்லாமல், மொழிரீதியாக மாநிலங்கள் அமைக்க வேண்டும் எனும் கட்சிகளின் போராட்டம், இதுதவிர நாட்டில் நிலவிய கடும் வறட்சி, உணவுப் பஞ்சம் ஆகியவை பெரும் சோதனைகளாக அமைந்தன.

இவை அனைத்தையும் மீறி, நேரு கடந்த 1957-ம் ஆண்டில் நேரு 371 இடங்களில் வென்றது. ஆனால், கடந்த முதல் தேர்தலைக் காட்டிலும் இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை 47.78 சதவீதமாக உயர்த்திக் கொண்டது.

அதன்பின் 1962-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி 493 இடங்களில் 361 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சோதனை காத்திருந்தது. கடந்த 1967-ம் ஆண்டு தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

1967-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி சந்தித்த தேர்தலில் 520 இடங்களில் 283 இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார்.

அதன்பின் காங்கிரஸ் கட்சி 1971-ம் ஆண்டு தேர்தலை இந்திரா காந்தி தலைமையில் 2-வது முறையாகச் சந்தித்தது. அப்போது, இந்திரா காந்தி கரீ ஹட்டாஹோ (வறுமையை ஒழிப்போம்) என்ற கோஷத்தை முன்வைத்து இந்திய வாக்காளர்களை ஈர்த்தார். இத்தேர்தலின் முடிவில், 1971-ம் ஆண்டு தேர்தலில் 352 இடங்களில் வென்று 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

இந்த இரு பிரதமர்களுக்குப் பின் தனிப் பெரும்பான்மை பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி பிரதமர் மோடி ஆட்சி அமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x