Last Updated : 22 May, 2019 03:57 PM

 

Published : 22 May 2019 03:57 PM
Last Updated : 22 May 2019 03:57 PM

வாரிசு அரசியலின் தோல்வியை ஏற்க முடியாமல் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை இழிவுபடுத்துகின்றன: பாஜக குற்றச்சாட்டு

வாரிசு அரசியலின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாததால் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி,  ஜனநாயகத்தை இழிவுபடுத்துகின்றன என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ''காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்று விடுவோம் என்று பயப்படுகின்றன. இதனால் இவிஎம் இயந்திரங்களின் மீது பழிபோடுகின்றன. அதன் மூலம் ஜனநாயகத்தை இழிவுபடுத்த முயற்சிக்கின்றன.

அவை இவிஎம் இயந்திரங்கள் மீது நம்பகம் இல்லாத தன்மையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கின்றன. ஆனால் ஒருமுறை கூட, லாஜிக்கலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அவர்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை.

இதனால் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் இவிஎம் இயந்திரங்களுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தார். ஆனால் அதில் தோல்வியே கிடைத்தது. அதற்குப் பிறகு அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். அங்கும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

வாரிசு அரசியலின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாததால், அவர்கள் ஜனநாயகத்தை இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர். இவிஎம்களுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் நாட்டு மக்கள் அந்தப் பிரச்சாரம் வெற்றியடைய அனுமதிக்க மாட்டார்கள்'' என்றார் முக்தர் அப்பாஸ் நக்வி.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவானவற்றுடன் 50 சதவீதம் அளவில் சரிபார்க்க வேண்டும் என்றும், விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x