Last Updated : 21 May, 2019 12:00 AM

 

Published : 21 May 2019 12:00 AM
Last Updated : 21 May 2019 12:00 AM

கருத்துக் கணிப்பு எதிரொலி; கர்நாடக ஆட்சியை பிடிக்க எடியூரப்பா மும்முரம்: பாஜக எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மக்களவைத் தேர்தலில் வாக்குகள் சிதறாத வகையில் காங்கிரஸ் மஜதவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த‌து.

மொத்தமுள்ள 28 தொகுதிகளில் மண்டியா தவிர்த்து பாஜக 27, காங்கிரஸ் 21, மஜத 7 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. இந்தியா டுடே, நியூஸ் 18, டைம்ஸ் நவ் ஆகிய தனியார் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 21- 25 இடங்களும், காங்கிரஸ் மஜத கூட்டணி 3 - 7 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

சிவோட்டர்ஸ், சுவர்ணா டிவி, டிவி 9 ஆகிய தனியார் சேனல்களின் கருத்துக்கணிப்பில் பாஜக 18 - 23 தொகுதிகளும், காங்கிரஸ் - மஜத கூட்டணி 7-10 தொகுதிகளும் வெல்லக் கூடும். இந்த கருத்துக்கணிப்புகளில் பாஜகவுக்கு அதிகப்பட்சமாக 54.47 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு 41.85 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளதால் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா உற்சாகம் அடைந்துள்ளார். 23-ம் தேதிக்கு பிறகு மாநில அரசியலில் மேற்கொள்ள வேண்டிய முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், அசோக் ஆகியோருடன் நேற்று அவசர‌ ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று கர்நாடக பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என தெரிகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் - மஜத தலைவர்களுக்கிடையே வார்த்தைப் போர் நீடித்துவரும் நிலையில், தேர்தலில் படுதோல்வி அடைந்தால் கூட்டணி பிரிந்துவிடும் என எடியூரப்பா கணக்கு போட்டுள்ளார். இந்த தேர்தல் தோல்வியின் காரணமாக அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் வருவார்கள் என்றும் கருதுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x