Published : 19 May 2019 07:25 PM
Last Updated : 19 May 2019 07:25 PM

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு: மாநில வாரியாக இடங்கள்? என்டிடிவி கருத்துக் கணிப்பில் தகவல்

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டண 300 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று என்டிடிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே- 19 வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளும்  வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் நடத்தியுள்ளன. அதில் பெரும்பாலானவை பாஜக தலைமையான தேசிய ஜனநாயக்க கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளன.

300 இடங்கள்

என்டிடிவி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், 542 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும். தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி 542 தொகுதிகளில்  127 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது என்றும் மற்ற கட்சிகளுக்கு 115 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மீண்டும் பாஜக

டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் கடந்த தேர்தலில் பாஜகவே கைப்பற்றி இருந்தது. இந்த முறையும் பாஜகவே கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பதில் ஆம்ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சி இடையே இருந்த இழுபறி போன்றவற்றால், பாஜக இந்த முறையும் 7 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்திவிட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எதிர்மாறாக முடிவுகள் வந்துள்ளன. மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக, ஆஎல்பி கூட்டணி 22 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது

கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணிக்குக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது குறித்து சுவர்னா நியூஸ் வெளியிட்ட அறிவிப்பில் பாஜக கூட்டணிக்கு 18 முதல் 20 இடங்களும், காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணிக்கு 7 முதல் 10 இடங்களும் கிடைக்கலாம். மற்ற கட்சிக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்புண்டு

டிவி9 கன்னடா வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 18 இடங்களும், காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணிக்கு 9 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு எனத் தெரிகிறது.

ஆந்திரா

ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கான தேர்தலில் நியூஸ்18 சேனலின் பிந்திய கருத்துக் கணிப்பில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சிக்கு அதிகபட்சமாக 12 இடங்கள் வரையிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்கள் வரையிலும், பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்கலாம்.

மத்தியப் பிரதேசம்

ஆஜ்தக் சேனல்வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 3 இடங்களில் வெல்ல வாய்ப்புண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் பாஜக சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்தபோதிலும் மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்லும் எனத் தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேசம்

நாட்டில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 46 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 72 இடங்களை பாஜக கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கூட்டணி 32 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு எனத் தெரியவந்துள்ளது.

தெலங்கானா

தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி12 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 2இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில் அதிமுக பாஜக கூட்டணிக்கு 11 இடங்களும், திமுக கூட்டணிக்கு 26 இடங்களும், மற்றகட்சிகளுக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்புண்டு என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு இந்தமுறை 35இடங்கள் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் , என்சிபிக்கு 12 இடங்களும், மற்ற கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x