Last Updated : 02 May, 2019 12:00 AM

 

Published : 02 May 2019 12:00 AM
Last Updated : 02 May 2019 12:00 AM

உ.பி.யில் மெகா கூட்டணியின் வாக்குகளை காங்கிரஸ் பிரிக்காது- பிரியங்கா காந்தி உறுதி

உத்தரபிரதேச மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் மெகா கூட்டணியின் வாக்குகளை காங்கிரஸ் பிரிக்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உறுதிபட தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள சலோன் எனுமிடத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் ஒரே இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. வாரணாசியில் நான் போட்டியிடாததற்கும் அதுவே காரணம்.

ஒருவேளை, நான் வாரணாசியில் போட்டியிட்டால், அந்த ஒரு தொகுதியில் மட்டுமே என்னால் கவனம் செலுத்த முடியும். அது, ஒட்டுமொத்த கட்சியின் வெற்றியை பாதித்துவிடும். இதன் காரணமாகவே, நான் தேர்தலில் களமிறங்கவில்லை. உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் சற்று பலவீனமான நிலையிலேயே உள்ளது. எனவே, முதலில் இங்குகட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கேற்ற வகையிலேயே, மக்கள் செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை காங்கிரஸ் இம்முறை தேர்வு செய்துள்ளது.

அதேசமயத்தில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியின் வாக்குகளை காங்கிரஸ் பிரிக்காது. மாறாக, பாஜகவுக்கு பெரும் பாதிப்பை காங்கிரஸ் ஏற்படுத்தும். மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளால், உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலையே வீசிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த முறை அக்கட்சி படுதோல்வியடையும் என்பது உறுதியாகியுள்ளது. இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x