Published : 26 Apr 2019 03:42 PM
Last Updated : 26 Apr 2019 03:42 PM

நான் தவறு செய்தால் என் வீட்டுக்கும் ரெய்டு வரும்: எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

நான் தவறு செய்தால் என் வீட்டுக்கும் ரெய்டு வரும் என்று கூறினார் பிரதமர் மோடி. இந்த பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அவர் கொடுத்த பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உ.பி.யில் உள்ள வாரணாசி தொகுதிக்கு கடைசி கட்டமாக மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார் மோடி. முன்னதாக, வாரணாசியில் காலையில் 9 மணி அளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் , ''வருமான வரித்துறை சோதனைகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ''நாங்கள் அரசியல்வாதிகள். ஏன் எங்களுக்குச் சொந்தமான இடங்களைச் சோதனை செய்கிறீர்கள்?'' என்று காங்கிரஸார் கேட்கின்றனர். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது.

நான் ஏதாவது தவறு செய்தால், வருமான வரித்துறையால் என் வீடும் சோதனை செய்யப்பட வேண்டும். சட்டம் அனைவருக்குமான சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்.

துக்ளக் சாலை (ராகுல் காந்தி தங்கியிருக்கும் வீட்டின் சாலை) தேர்தல் ஊழல் பணத்தை, ராஜவம்சத்தின் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திவிட்டனர்'' என்றார் மோடி.

எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. ஆளும் பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சியினரையும் வருமான வரித்துறை கண்டுகொள்வதில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் வீட்டில் அண்மையில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்துப் பேசிய மோடி, ''ஐடி ரெய்டு அரசியல் பழிவாங்கல் அல்ல. சோதனைகள் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டே நடைபெறுகின்றன'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x