Last Updated : 21 Apr, 2019 12:00 AM

 

Published : 21 Apr 2019 12:00 AM
Last Updated : 21 Apr 2019 12:00 AM

சிறையில் இருந்தே கட்சி, சின்னத்துக்கு அனுமதி அளித்த லாலு

சிறையில் இருந்தபடி கட்சி மற்றும் சின்னத்துக்கு அனுமதி அளித்ததாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் மீது ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், அவரது கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும்படி மத்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த லாலு,ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை சரியில்லை எனக் கூறி அம்மாநிலத் தலைநகரான ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இங்கிருந்தபடியே, பிஹாரில் மக்களவைத் தேர்தலுக்காக பேசி தன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளார். இதில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் சமதா, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா மற்றும் விஐபி ஆகிய கட்சிகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஆர்ஜேடி சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களுக்கு அதன் தலைவர் என்பதால் லாலுவே கட்சி மற்றும் சின்னத்துக்கான அனுமதியை அளிக்க வேண்டும்,இதற்காக, ‘பார்ம் ஏ மற்றும் பி’யில் லாலு சிறையில் இருந்தபடியே கையொப்பம் இட்டுத் தந்துள்ளார். இதைக் குறிப்பிட்டு, பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சியான ஜேடியு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்திதொடர்பாளர் நீரஜ்குமார் ஆணையத்துக்கு அனுப்பிய புகாரில், ‘‘சனிக்கிழமைகளில் மட்டும் தன் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி பெற்ற கிரிமினல்கைதியான லாலு, மருத்துவமனையில் இருந்தபடி கட்சி நடத்துகிறார். வேட்பாளர்களையும் தேர்வு செய்து அவர்கள் மனுக்களுக்கான சான்று கையெழுத்துடன் அளித்துள்ளார்.

இதற்காக, நீதிமன்றம், சிறை அதிகாரிகள் என எவரிடமும் அனுமதி பெறவில்லை என்பதால் அனைத்து வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

கைதியாக இருந்து சமூக வலைதளங்களில் லாலு இடம்பெறுவதையும் தடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

லாலுவுக்கு புதிதல்லகைதாகி இருக்கும் போது தன் கட்சியை நடத்துவது லாலுவுக்கு புதிதல்ல. இதற்கு முன்னர், தன் மனைவி ராப்ரி முதல்வராக இருந்தபோது பிஹாரில் ஆட்சியையும் நடத்தி உள்ளார் லாலு. ஒரு கட்சியின் தலைவர் சிறையில் இருக்கும்போது, வேட்பாளர்களின் விண்ணப்பங்களில் கையொப்பம் இடக்கூடாது என சட்டத்தில் இடமில்லை என்பதன் லாபம், லாலுவுக்கு கிடைத்து வருகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆர்ஜேடியின் மூத்த தலைவரான சிவானந்த் திவாரி கூறும்போது, ‘‘நீதிமன்றக் காவலில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என்கின்ற நிலையில், கைதிகள் கையொப்பம் இடுவதில் தவறு இல்லை. இருகட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் செய்யப்பட்டுள்ள புகார் ஜேடியூவின் தோல்வியுறும் அச்சத்தை காட்டுகிறது’’ எனத் தெரிவித்தார்.

அரசையும் நடத்திய லாலுபிஹார் முதல்வராக இருந்த லாலு, முதன்முறையாக கால்நடைத்தீவன வழக்கில் சிக்கி ஜூலை 1997-ல் தனது பதவியை இழந்தார். தன் மனைவி ராப்ரி தேவியை அப்பதவியில் அமர வைத்தார் லாலு. பெயரளவில் முதல்வராக ராப்ரி இருக்க, சிறையில் இருந்தபடி அரசுடன் சேர்த்து தன் கட்சியையும் லாலு இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x