Published : 20 Apr 2019 04:44 PM
Last Updated : 20 Apr 2019 04:44 PM

துக்க வீடுகளுக்குச் சென்று உறவினர்களை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் அதிசய குரங்கு: வைரலாகும் காணொலி

கர்நாடகாவில் குரங்கு ஒன்று அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் நேரே சென்று உறவினர்களை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளது. நேற்றும் அவ்வாறு ஒரு துக்க வீட்டில் குரங்கு சென்று ஆறுதல் கூறிய காணொலி வைரலாகி வருகிறது.

பொதுவாக மனிதர்களைவிட விலங்குகள் குணாம்சத்தில் சிறந்தவை. காரணம் அவைகள் உணவு உண்ணும் பிரச்சினை தவிர வேறு எந்த பிரச்சினையையும் மனதில் வைத்து பூட்டிக்கொள்வதில்லை. அவைகளுக்கு சூழ்ச்சி தெரியாது, ஆகவே யாருக்கும் அவை தீங்கு நினைப்பதில்லை.

அன்பைக்கொடுத்தால் திருப்பி தருவதில் விலங்குகள் நம்மை பிரமிக்க வைத்துள்ளன. இறந்துபோன எஜமானனுக்காக சமாதியில் உணவருந்தாமல் உயிர் நீத்த நாய், பூனை கதைகள் நம்மை பிரமிக்க வைத்துள்ளன. எழுத ஆரம்பித்தால் உதாரணங்கள் ஆயிரக்கணக்கில் நீளும். அன்பை கொடுத்தால் அதைமட்டுமே திருப்பி தருபவை அவை.

ஆனால் அதையும் தாண்டி ஒரு குரங்கின் செய்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் ஒரு வயதான மூதாட்டிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி புகழ்ப்பெற்றது. அதைப்பார்த்து வியப்படையாதவர்களே இல்லை எனலாம்.

அதேபோன்றதொரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது, நடந்து வருகிறது, நாளையும் நடக்கும் இதை குறிப்பிடக்காரணம் அந்த குரங்கின் செய்கை. கர்நாடக மாநிலம் நார்கண்ட் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரப்பா கம்மார். முதியவரான இவர் நோய்க்கடுமை காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடலை வீட்டில் கிடத்தி உறவினர்களும், ஊர் பொதுமக்களும் அழுதபடி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உறவுப்பெண்கள் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தனர். அப்போது குரங்கு ஒன்று கூட்டத்தின் இடையே புகுந்து உடல் அருகே வந்தது.

அதைப்பார்த்த  புதிதாக துக்க வீட்டுக்கு வந்தவர்கள் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த ஊர் மக்கள் அவர்களை தடுத்துவிட்டனர். பின்னர் குரங்கு சாதாரணமாக அந்த கூட்டத்துக்குள் சென்று அழுதுக்கொண்டிருந்த பெண்கள் இடையே அமர்ந்தது.

மிகச்சரியாக முதியவரின் மகளை கட்டிப்பிடித்து அவர் தலைமீது ஆறுதலாக கையால் தடவி கொடுத்தது. மீண்டும் கட்டி அணைத்தது. மற்றப்பெண்கள் இதை அழுதபடி பார்த்துக்கொண்டிருந்தனர். குரங்கின் செய்கையை யாரும் தடுக்கவில்லை.

இதுகுறித்து புதிதாக துக்கவீட்டுக்கு வந்த பக்கத்து ஊர்க்காரர்கள் என்னங்க இது என்று ஆச்சர்யமாக கேட்க அந்த ஊர் கிராமமக்கள் சாதாரணமாக இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான், எந்த வீட்டில் துக்கம் நிகழ்வு இருந்தாலும் இந்த குரங்கு நேராக வரும் சரியாக உறவினரை கண்டுபிடித்து கட்டிபிடித்து தலையை கோதி ஆறுதல் சொல்லும் என்று தெரிவித்தனர்.

கடந்த ஓரு வருடமாக எங்கள் ஊரில் அனைத்து துக்க வீடுகளுக்கும் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்லி வருகிறது, கடந்த டிசம்பர் மாதம்    அதே பகுதியில் நரகுந்தா தாலுகாவைச் சேர்ந்தவர் நாகனகவுடா பாட்டீல் என்கிற 71 வயதான முதியவர்  மாரடைப்பால் திடீர் என உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் சோகத்தில்  மூழ்கி கிடந்தனர்.

துக்கவீட்டில் உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அங்கும் வந்த இதே குரங்கு சடலத்தின் அருகே உட்கார்ந்து மவுன அஞ்சலி செலுத்தியது.  பின்னர் வீட்டில் இருந்து  குரங்கு வெளியே வந்து வீட்டு திண்ணையில் துக்கத்துடன் அமர்ந்திருந்த நாகனகவுடா பாட்டீலின்  மூத்த மகன் மரிகவுடாவின் அருகில் அமர்ந்து அவர்  தலையை வருடிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்துவிட்டு சென்றது.

குரங்கின் இந்த செய்கையை ஒருவர் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ் அப் சமூக வலைதளத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. இறந்தவர் தனக்கு சொந்தமில்லை என்றால் சாதாரணமாக கடக்கும் மனிதர்களிடையே யார் வீட்டில் துக்கம் நிகழ்ந்தாலும் ‘மனிதாபிமானத்துடன்’ நடப்பது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x