Last Updated : 20 Apr, 2019 11:13 AM

 

Published : 20 Apr 2019 11:13 AM
Last Updated : 20 Apr 2019 11:13 AM

திஹார் சிறையில் கைதியின் முதுகில் ஓம் வடிவில் சூடுவைத்த சர்ச்சை: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள கைதியின் முதுகில் ஓம் என்ற இந்து மத அடையாளம்  சூடு வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷபீர் என்ற நபீர் (34). இவர் டெல்லி திஹார் சிறையில் கடந்த 2016 மார்ச் மாதம் முதல் திகார் சிறையில் பகுதி எண் 4-ல் அடைகப்பட்டிருந்தார். ஆயுதக் கடத்தல் மற்றும் கொலை குற்றம் இவர் மீது இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ஷபீர் தனது அறையில் உள்ள மின்சார அடுப்பு சரியாக இயங்கவில்லை என சிறை 4-ன் கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானிடம் புகார் கூறியிருக்கிறார். 

இந்தப் புகாரால் ஆத்திரமடைந்த சவுகான், கைதி ஷபீரை தனது அலுவகத்துக்கு வரவழைத்திருக்கிறார். அங்கு அவரை சவுகானும் இன்னும் சில சிறை அதிகாரிகளும் இணைந்து சரமாரி தாக்கியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு உணவேதும் கொடுக்காமல் துன்பப்படுத்தியுள்ளனர். மேலும், சூடான உலோகத்தால் ஷபீரின் முதுகில் ஓம் என்ற அடையாளம் பொரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஷபீர் நீதிபதி ரிச்சா பராஷார் முன்னால் தனது சட்டையைக் கழற்றி முதுகிலிருந்து சூடு அடையாளத்தைக் காட்டியுள்ளார்.

ஷபீரின் உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகி புகார் கொடுத்துள்ளனர். சிறை அதிகாரிகளால் ஷபீர் துன்புறுத்தப்படுவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அந்த மனுவில் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார். முதுகில் உள்ள அடையாளம் குறித்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் திரட்டி சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஷபீரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து ஷபீர் 4-ம் எண் சிறையிலிருந்து 1-ம் எண் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

ஷபீர் டெல்லியில் உள்ள இர்ஃபான் கேங் என்ற ஆயுதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர் அடிக்கடி குற்றங்கள் செய்து சிறைக்கு வருபவர் மட்டுமல்ல சிறைக்கு வந்தாலும்கூட எப்போதும் விதிமுறைகளை மீறி சர்ச்சை செய்பவர் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x