Last Updated : 16 Apr, 2019 05:40 PM

 

Published : 16 Apr 2019 05:40 PM
Last Updated : 16 Apr 2019 05:40 PM

தேசம் மக்களால் ஆளப்பட வேண்டும்; தனிமனிதரால், ஒற்றை சித்தாந்தத்தால் அல்ல: ராகுல் காந்தி தாக்கு

இந்திய தேசம் மக்களால் ஆளப்பட வேண்டும், தனிமனிதரால் ஒரு சித்தாந்தத்தால் அல்ல.  பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் அனைத்து குரல்களையும் நசுக்குகின்றன  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , உ.பியின் அமேதி தொகுதி தவிர்த்து, கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனாபுரத்தில் இன்று ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பத்தனாபுரத்தில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்திய தேசம் மக்களால் ஆளப்பட வேண்டும். ஒரு தனிமனிதரால், ஒரு சித்தாந்தத்தால் ஆளக்கூடாது. இந்த தேசம் தற்போது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது, அனைத்து குரல்களையும் நசுக்க முயற்சிக்கிறார்கள்.

ஒரு சித்தாந்தம் மட்டுமே தேசத்தை ஆள வேண்டும் என்று பாஜக நம்புகிறது. ஆனால், நாங்கள் மக்கள் நாட்டை ஆள வேண்டும் என்று விரும்புகிறோம். காங்கிரஸ் இல்லாத தேசம் வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அப்படியென்றால், தேசத்தில் இருந்து காங்கிரஸ் சிந்தனையை அகற்றப் போகிறார். ஆனால், நாங்கள் உங்களுடைய வார்த்தையில் ஒத்துப்போகமாட்டோம்.

உங்களின் பேச்சு, செயல் தவறு என்று உணரும்வரை நாங்கள் போராடுவோம். உங்களை தேர்தலில் தோற்கடிப்போம். ஆனால் உங்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடமாட்டோம்.

நீங்கள் மிகச்சிறந்த உதாரணம் என்பதால்தான் நான் கேரளாவில் போட்டியிட முடிவு செய்தேன். சகிப்புத்தன்மையில் உங்களின் வரலாறு, பல்வேறு கலாச்சாரங்களை நீங்கள் புரிந்து கொண்ட வரலாறு, உலகில் நீங்கள் பல்வேறு தரப்பினருடன் தொடர்பில் இருப்பது, நம்பிக்கையுடன் செயலாற்றுவது என்னை ஈர்த்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக நமது பிரதமர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். 2 கோடி வேலைவாய்ப்புகள், ரூ.15லட்சம் வங்கிக்கணக்கில் டெபாசிட், விவசாயிகளுக்கின் விளைபொருட்களுக்கு ஆதார விலை ஆகியவை வந்து சேர்ந்ததா. பிரதமர் மோடியிடம் இருந்து எத்தனை பேர், வங்கி்க்கணக்கில் இருந்து பணம் பெற்றீர்கள்.

மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒரு ஆண்டுக்கு செலவு செய்யக்கூடிய அளவுக்கு ரூ.30 ஆயிரம் கோடியை, பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தம் மூலம் வழங்கியுள்ளார். விமானத் தயாரிப்புதுறையில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு பாதுகாப்புத்துறையில் மிகப்பெரிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார். 15 மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கு ரூ.3.50லட்சம் கோடியை கடன்தள்ளுபடியாக அளித்துள்ளார் மோடி.

காங்கிரஸ் கட்சி உங்களின் குரலுக்கு மதிப்பளிக்கும். உங்களின் மனதில் இருந்து அச்சத்தை போக்குவதில் ஆர்வம் காட்டுவோம். எந்தவிதமான திட்டத்தை வெளிப்படையாகப் பேசுவோம். ஒரு சிந்தாந்தத்தை, கொள்கையை உங்கள் மீது திணிக்கமாட்டோம். நீங்கள் தான் எங்கள் சித்தாந்தம்.

உங்கள் குரல்தான் எங்கள் சித்தாந்தம். நீங்கள் இல்லாமல் தேசத்துக்கு அர்த்தமில்லை என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அதன்காரணமாகவே, நாங்கள் நேர்மைக்கும், நீதிக்கும் போராடுகிறோம். இந்த தொகுதியில் நான் போட்டியிடுவது எனக்கு கிடைத்த கவுரவம்

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x