Published : 13 Apr 2019 04:45 PM
Last Updated : 13 Apr 2019 04:45 PM

கோடையில் பறவைகளுக்குத் தண்ணீர்: ரூ.6 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் மண் பாண்டங்களை வழங்கும் பறவை ஆர்வலர்

கேரளாவைச் சேர்ந்த 70 வயது ஸ்ரீமன் நாராயணன், கோடையில் தண்ணீர் தேடி அலையும் பறவைகளுக்காக தண்ணீர் சேகரிக்க10 ஆயிரம் மண் பாத்திரங்களை மக்களிடம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

எர்ணாகுளத்தின் முப்பத்தடம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் விருதுகள் பெற்ற எழுத்தாளர். மண்பாண்டங்கள் வழங்குவது குறித்துப் பேசுபவர், ''கோடை வெயில் தகிக்கத் தொடங்கிய சூழலில், பறவைகளுக்கான நீராதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்டன. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் உடலில் நீர் வறட்சியால் அவதிப்படுகின்றன. அதனால் தண்ணீர் வைக்க உதவும் மண் பாண்டங்களை வழங்க முடிவெடுத்தேன். ஒரு மண் பாண்டத்தில் குறைந்தபட்சம் 100 பறவைகள் தண்ணீர் பருகலாம்'' என்கிறார்.

 

வீடுகள், கிளப்புகள், கல்வி நிறுவனங்கள் என பல்வேறு இடங்களுக்குச் சென்று சுமார் 9 ஆயிரம் மண் பாண்டங்களை இலவசமாகவே வழங்கியுள்ளார் ஸ்ரீமன். இதற்கு 'ஜீவ ஜலத்தினு ஒரு மணு பாத்ரம்' (வாழ்வைக் காக்கும் தண்ணீருக்காக ஒரு மண் பாத்திரம் ) என்று பெயரிட்டுள்ளார்.

 

கடந்த 2018-ல் தொடங்கிய இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், 2019-ல் மீண்டும் மண் பாண்டங்களை வழங்க ஆரம்பித்துள்ளார். 10 ஆயிரம் மண் பாத்திரங்களை வாங்க சுமார் 6 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. லாட்டரி விற்பனை மற்றும் உணவகம் மூலம் கிடைக்கும் வருமானத்தை இயற்கையைக் காப்பதற்காகவே செயல்படுகிறார்.

 

மூன்று பெண் குழந்தைகளின் தந்தையான ஸ்ரீமன்,''எனது மகள்களுக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டேன். அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். என்னுடைய வருமானத்தை எதிர்காலத்துக்காகச் சேமிக்காமல், நிகழ்காலத்தில் பறவைகளுக்காகச் செலவிடுகிறேன்'' என்கிறார்.

 

இதைத் தவிர கடந்த ஆண்டு எர்ணாகுளம் முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளார். இதற்கு ரூ.15 லட்சம் செலவாகியுள்ளது. இதுகுறித்துப் பேசும் ஸ்ரீமன், ''என்னுடைய கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்திலும் சுமார் 10 ஆயிரம் மரங்களை நட்டுவைத்துள்ளேன். நடும்போது, ஒவ்வொரு தெருவிலும் ஒரு மரத்திலாவது பழங்களைப் பறிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இதன்மூலம் பறவைகள் நிம்மதியாகப் பசியாறும் அல்லவா?'' என்று புன்னகைக்கிறார் இந்த இயற்கை நேசர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x