Last Updated : 11 Apr, 2019 04:18 PM

 

Published : 11 Apr 2019 04:18 PM
Last Updated : 11 Apr 2019 04:18 PM

மோடி வெல்லமுடியாதவர் அல்ல என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தும்: ராகுல் காந்தி சவால்

மோடி வெல்லமுடியாதவர் அல்ல என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்தார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக இன்று முதல் மே 19-ம் தேதி வரை நடக்கிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இதில் கடந்த 5 முறைக்கு மேலாக போட்டியிட்டு வரும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இந்த முறையும் போட்டியிடுகிறார். அதற்காக ரேபரேலி தொகுதியில் இன்று சோனியா காந்தி மனுத்தாக்கல் செய்தார். அவருடன் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி வந்திருந்தனர்.

மனுத்தாக்கல் செய்து முடித்த பின், நிருபர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"மோடி ஒன்றும் வெல்லமுடியாதவர் அல்ல என்பதை வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தும்.வரலாற்றில் பலரும் தாங்கள் வெல்லமுடியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் தோற்றுப்போன சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள். அவ்வாறு பேசுவது தவறு என்பதை வரலாறு நிரூபித்து இருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக மோடி மக்களுக்கு என்ன செய்தார், ஒன்றும் செய்யவில்லை. மீண்டும் நான் சவால் விடுகிறேன். ரஃபேல் விவகாரத்தில் நான் மோடியிடம் நேருக்கு நேர் வாதிடத் தயாராக இருக்கிறேன்.

இந்த வாதத்தின் போது, மோடியால் யாருடைய கண்களைப் பார்த்தும் பேச முடியாது என்பதை உறுதியாகக் கூறுவேன். நான் இவ்வாறு பேசுவதால், எனக்கு எதிராகப் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் தலைவர்களை சிறையில் தள்ளுவேன் என்று மோடி மிரட்டல் விடுத்துள்ளதற்கெல்லாம் நான் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப் போவதில்லை.

ரஃபேல் விவகாரத்தில் சீராய்வு மனுக்களுடன் தாக்கலான ஆதாரங்களை ஆய்வுக்கு எடுக்கலாம், விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்புக்குரியது. இத்தீர்ப்புக்கு பிரதமர் மோடி ஏதேனும் பதில் அளிக்க வேண்டும். ஏன் ரஃபேல் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று  நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு மோடி பதில் அளிக்க வேண்டும்''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x