Last Updated : 09 Apr, 2019 10:05 AM

 

Published : 09 Apr 2019 10:05 AM
Last Updated : 09 Apr 2019 10:05 AM

அத்வானி, ஜோஷியுடன் அமித் ஷா திடீர் சந்திப்பு

பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை அவர்களின் இல்லத்துக்குச் சென்று  அந்த கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார்.

சமீபத்தில் அத்வானி, தனது முகநூல் பக்கத்தில் அதிருப்தியுடன் சில கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்ளாக வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை நடைபெற உள்ளது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கடந்த 6 முறை போட்டியிட்டு வென்ற குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் இந்த முறை பாஜக தேசியத் தலைவர் அமித் போட்டியிடுகிறார்.

மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வயது மூப்பு காரணமாக இந்த முறை தேர்தலில் வாய்ப்பு தரப்படவில்லை. இதனால், இரு தலைவர்களும் அதிருப்பதியில் இருந்ததாகக் கூறப்பட்டது.

பாஜக நிறுவப்பட்ட நாள் கடந்த 6-ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அத்வானி கருத்து தெரிவித்திருந்தார். அதில், " பாஜக தான் கடந்து வந்த பாதையை பின்நோக்கி பார்க்க வேண்டும். அதுபோல எதிர்காலத்தை பற்றிய சிந்தனையும், சுயபரிசோதனையும் பாஜக வுக்கு தேவை. முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியாகதான் தன்னலம்” என்ற கொள்கையைத்தான் நான் அனைத்து சூழ்நிலைகளிலும் கடைபிடிக்க முயற்சி செய்தேன். இனியும் செய்வேன்.
 

இந்திய ஜனநாயகத்தின் சாராம்சம் என்பது  பன்முகத்தன்மையை மதித்தல், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை ஆகும். தொடக்கத்திலிருந்தே பா.ஜ.க. அரசியல் ரீதியான எதிரிகளை விரோதிகளாக பார்த்ததில்லை. மாற்று கருத்துடையவர்களை தேசவிரோதிகளாக நினைத்ததில்லை. ஒவ்வொரு குடிமகனின்  அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு பாஜக எப்போதும் மதிப்பளித்துள்ளது " எனத் தெரிவித்திருந்தார்.

அத்வானியின் இந்த கருத்துக்கள் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அதேசமயம், எதிர்க்கட்சிகளும் மூத்த தலைவர்களை பாஜக மதிப்பதில்லை என்று குற்றம்சாட்டியது.

இந்த சூழலில், முரளிமனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி இல்லத்துக்கு நேற்று தேசியத் தலைவர் அமித் ஷா சென்று அவர்களைச் சந்தித்தார். அப்போது, கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்கிற விஷயத்தை அவர்களிடம் அமித் ஷா எடுத்துக்கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பாஜக தலைமை சார்பில் இந்த சந்திப்புக் குறித்து  எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x