Last Updated : 07 Apr, 2019 04:37 PM

 

Published : 07 Apr 2019 04:37 PM
Last Updated : 07 Apr 2019 04:37 PM

குடிமக்கள் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பாஜக உறுதி அளிக்கவில்லை: கல்ராஜ் மிஸ்ரா மறுப்பு

குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் அளிப்பதாக பாஜக என்றுமே உறுதி அளிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பொதுமக்களிடம் பொய்கூறி எதிர்க்கட்சிகள் திசைமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி அளித்ததாகக் கூறப்படும் உறுதி பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.  இவர் வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியக் குடும்பங்களின் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக அளித்த உறுதி என்னவாயிற்று? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அதுபோன்ற உறுதியை பிரதமர் மோடி உட்பட எந்த பாஜக தலைவரும் அளிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் பாஜகவின் 39-வது ஆண்டுவிழாவில் சண்டிகரில் நேற்று கலந்துகொண்ட போது இதை தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கல்ராஜ் மிஸ்ரா கூறும்போது, ''வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் இந்தியா கொண்டுவரப்பட்டால் ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் பெறுமளவிற்கு இருக்கும் என்று தான் பொதுக்கூட்டங்களில் பாஜக தலைவர் தெரிவித்தார். 2014 தேர்தலுக்கு முன் கூறப்பட்ட இந்த தகவல் எங்கள் உறுதியாக பாஜக தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறவில்லை'' எனத் தெரிவித்தார்.

கறுப்புப் பண விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடி மீது தவறான புகாரைக் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம், பாஜக தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு செய்த பல நல்ல திட்டங்களில் இருந்து திசைமாற்றும் முயற்சியும் காங்கிரஸ் செய்து வருவதாகவும் மிஸ்ரா குற்றம் சாட்டினார்.

பாஜகவின் மூத்த தலைவரான மிஸ்ரா அதன் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளார். உ.பி.யின் தேவரியா எம்.பி.யான மிஸ்ராவிற்கு 75 வயது கடந்தமையால் அவர் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x