Last Updated : 07 Apr, 2019 04:02 PM

 

Published : 07 Apr 2019 04:02 PM
Last Updated : 07 Apr 2019 04:02 PM

‘உலகிலேயே மிகுந்த வன்முறையானது இந்து மதம்’- சர்ச்சையில் சிக்கிய நடிகை ஊர்மிளா, டிவி ஜர்னலிஸ்ட் ராஜ்தீப் சர்தேசாய்

வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் மும்பை வடக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் பாலிவுட் நடிகை ஊர்மிளா மதோந்த்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்து மதத்தை அவதூறு செய்யும் விதமாக பேசியதையடுத்து அவர் மீது பாஜக தொண்டர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

 

பாலிவுட் நடிகை ஊர்மிளா மட்டுமல்லாது, டிவி தயாரிப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் ஊர்மிளாவை இப்படிப் பேசுமாறு தூண்டிய ராகுல் காந்தி ஆகியோர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுரேஷ் நக்வா என்ற பாஜக வேட்பாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

 

ராஜ்தீப் சர்தேசாய் எடுத்த ஊர்மிளாவின் பேட்டியில், ஊர்மிளா “உலகிலேயே இந்துமதம்தான் வன்முறையான மதம்” என்று கூறியிருந்தார்.  இதனையடுத்து பாஜக தொண்டர், “இத்தகைய கருத்துகள் தவறானவை, மோசமானவை, அற்பத்தனமானவை. சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்ற இந்து மதத்தை வன்முறை மிகுந்தது என்கிறார் ஊர்மிளா இது இந்துக்கள் மீதான அவதூறு” என்று தன் புகாரில் தெரிவித்துள்ளார் பாஜக தொண்டர்.

 

மேலும் பத்திரிகையாளரும் தொலைக்காட்சி தயாரிப்பாளருமான ராஜ்தீப் சர்தேசாய், ஊர்மிளாவை இப்படிப் பேச அனுமதித்துள்ளார் அதனால் அவர் மீதும் வழக்குப் போட வேண்டும் என்று கோரியுள்ளார்.

 

இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்தைத் தொடர்பு கொண்ட போது, ‘பாஜகவுக்கு  காலிலிருந்து பூமி நழுவுகிறது, மும்பை நார்த் தொகுதியில் தோற்பது உறுதியானவுடன் ஊர்மிளாவின் சொந்த வாழ்க்கை, திருமணம் என்று அவதூறு செய்தனர், தற்போது வாக்காளர்களை மதரீதியாகப் பிளவு படுத்தப்பார்க்கின்றனர்’ என்றார்.

 

மேலும், மக்கள் அதிருப்தி மேலிடும் பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி ஊர்மிளாவிடம் தோற்பது உறுதி என்பது பாஜகவுக்கு நன்றாகத் தெரியும் என்கிறார் சாவந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x