Last Updated : 30 Mar, 2019 05:27 PM

 

Published : 30 Mar 2019 05:27 PM
Last Updated : 30 Mar 2019 05:27 PM

அறிவில்லாத அரசுதான் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும்: மிஷன் சக்தி குறித்து ப.சிதம்பரம் காட்டம்

செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை பிரதமர் மோடி  பெருமையாகப் பேசிய நிலையில், அறிவில்லாத அரசுதான், பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டமாகப் பேசியுள்ளார்.

இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், மற்ற எதிரிநாட்டு செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனையை கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பாதுகாப்புதுறையின் டிஆர்டிஓ துறை நடத்தியது.இந்த திட்டத்துக்கு மிஷன் சக்தி திட்டம் என பெயரிடப்பட்டு இருந்தது.

இந்த மிஷன் சக்தி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சமூக ஊடங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தார்போல், இந்தியாவிடம் செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை இருக்கிறது என்றும்  சோதனையின் போது, மேலும், ஒரு செயற்கைக்கோளைம் துல்லியமாக ஏவுகணை தாக்கி 3 நிமிடங்களில் அழித்தது என்று மோடி பெருமையாகக் குறிப்பிட்டார்.

அரசு ஊடகங்கள் மூலம்  பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உரைநிகழ்த்தியது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், அது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றியதில் எந்தவிதமான தேர்தல் விதிமுறை மீறலும் இல்லை என்று நேற்று அறிவித்தது.

இதற்கிடையே காங்கிரஸ்  மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், மிஷன் சக்தி திட்டத்தை வெளிப்படையாக அறிவித்த பிரதமர் மோடியையும், அரசையும் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், " செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்த முடியும் எனும் வல்லமை நமக்கு பல ஆண்டுகளாக இருக்கிறது. புத்திசாலி அரசு இதுபோன்ற பாதுகாப்பு ரகசியத்தை வெளியே கசியவிடமாட்டார்கள். அறிவில்லாத அரசுதான் இதுபோன்ற ரகசியத்தை வெளியிட்டு, பாதுகாப்புத் துறைக்கு துரோகம் விளைவிப்பார்கள்.

தேர்தல் நேரத்தில் மிஷன் சக்தி அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?. தேர்தல் பிரச்சாரத்தின் நடுப்பகுதியில் ஏன் இந்த அறிவிப்புசெய்யப்பட்டது?. தள்ளாடிவரும் பாஜகவின் புகழுக்கு ஊக்கம் அளிப்பதர்காகத்தான் " எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டில், ப.சிதம்பரம், பிரதமர் மோடிக்கு எழுப்பிய கேள்வியில், " தேசத்தில் வேலையின்மை வீதம் 7.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் இது மிகவும் உயர்ந்தபட்சம். ஏன் இந்த நிலை?, இதற்கு மோடி பதில் அளிப்பாரா. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 4.70 கோடி வேலைவாய்ப்புகளை மக்கள் இழந்துள்ளனர். ஏன் இந்த நிலை? இதற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பாரா ? " எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x