Published : 29 Mar 2019 08:46 PM
Last Updated : 29 Mar 2019 08:46 PM

மோடிக்கு எதிராக யார்? என்ற கேள்வி 2024-ல் வரலாம்; 2019-ல் வாய்ப்பேயில்லை : பிரதமர் மோடி பேட்டி

வரும் தேர்தலில் 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி அருதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

மக்கள் ஏற்கெனவே பாஜக சார்பாக மோடி சார்பாக முடிவெடுத்து விட்டனர், இன்னொரு முகத்தை மக்கள் தேடவில்லை என்றார்.

 

ரிபப்ளிக் பாரத் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்,  செயற்கைக்கோள் அழிப்பு சோதனை மிஷன் சக்தி மேற்கொள்ளப்பட்ட காலம் சரியானதே ஓபன் ஸ்பேஸ் டெஸ்ட் செய்ய கிடைத்தது அதனால் நடத்தப்பட்டது என்றார்.

 

“சாகசம் என்றோ முயற்சி என்றோ எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள், இவை உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை.  ஒரு குறிப்பிட்ட காலத்தில் விண்வெளியில் நமக்கு இடம் தேவை என்பதை உலக நாடுகளுக்கு சொல்ல வேண்டியுள்ளது. அதாவது விண்வெளி நெரிசல் அல்லது மோதல் ஏற்படக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக. நாம் ஓபன் ஸ்பேஸ் கேட்க வேண்டும், அதனை முடிவு செய்ய வேண்டும். இது மிக நீண்டகால நடைமுறை” என்றார்.

 

எதிர்க்கட்சிகள் குறித்து கூறிய பிரதமர் மோடி,  “2014ஐ விட இப்போது எதிர்க்கட்சிகள் சிதறிப்போயுள்ளனர்.  ஆந்திராவிலோ, மேற்கு வங்கத்திலோ உடன்படிக்கை ஏதும் உள்ளதா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏதேனும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதா நீங்களே கூறுங்கள். கேரளாவிலோ, ஒடிஷாவிலோ இது நடந்ததா?

 

தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவும் வாய்ப்பில்லை, இன்றே பாருங்கள் ஒருவரையொருவர் கவிழ்ப்பதற்கு தங்களால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கின்றனர். அவர்கள் பேச்சுகளையும் அறிக்கைகளையும் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

 

இந்த நாட்டு மக்கள் நரேந்திர மோடிக்கு அருதிப்பெரும்பான்மை முடிவு செய்து விட்ட பிறகு என்ன நடக்கப்போகிறது? முடிவுகள் உறுதியானவை. அதில் சந்தேகமேயில்லை. அருதிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சியை ஆட்சியில் அமரவைக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள், நாங்கள்தான். தேஜகூவுக்கு 300 சீட்களை வெற்றி பெற்றுக் கொடுக்க அவர்கள் முடிவு செய்து விட்டார்கள்” என்றார்.

 

2019-ல் மோடிக்கும் யாருக்கும் போட்டி என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், “2024-ல் தான் இந்த கேள்வி வரும், 2019-ல் வாய்ப்பேயில்லை.  இந்த நாட்டு மக்கள் ஒரு பக்கம் முடிவு எடுத்து விட்டனர். அதனால்தான் இந்த நாட்டு மக்கள் இன்னொரு போட்டி முகத்தை அடையாளம் காணவில்லை. இல்லவே இல்லை. டிஆர்பி ரேட்டிங்குக்காக சில சேனல்கள் இத்தகைய கேள்விகளை எழுப்புகின்றனர்.

 

இது உங்களுக்கு முக்கியம் ஏனெனில் 2014-ல் மன்மோகன் சிங் இருந்தார், அவரை எனக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் உங்களுக்கு டிஆர்பி மதிப்பு கிடைக்கவில்லை.  ஆகவே அரவிந்த் கேஜ்ரிவால் பக்கம் போனார்கள், அவருக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லை. ஆகவே உங்கள் கடைகளை நடத்த அவரை எதிர்காலப் பிரதமராக நீங்கல் ஊதிப்பெருக்கலாம்.

 

வாஜ்பாயி ஆட்சியில் 6 கோடி வேலை வாய்ப்பு உருவானது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் தான் உருவாக்கப்பட்டது, இருப்பினும் வாஜ்பாயியை அவர்கள் விமர்சித்தனர்.

 

ஆனால் எங்கள் ஆட்சியில் முத்ரா திட்டம் மூலம் 4 கோடி பேர் கடன் பெற்றுள்ளார்கள். அவர்கள் தொழில் தொடங்கியிருப்பார்கள், பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருப்பார்கள்.  ஈபிஎஃப்ஓவில் புதிதாக 1 கோடி பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

ரயில்வே துறை இரு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு மனித உழைப்பு தேவைப்படாதா? இன்று சூரிய சக்திக்காக பெரிய பரப்புரை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. காரணம் பெரிய முதலீடு. இதனால் வேலைவாய்ப்பு கிடைக்காது என்று யாரேனும் கூறுகிறார்களா? அவர்கள் கூறுவதற்கு ஏதாவது அடிப்படை உள்ளதா? அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் கூச்சலிடுவார்களா?” என்று காட்டமாகப் பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x